Total Views: 1404
யார் தன்னை வெறுத்தாலும் அவர்களை வெறுக்க தெரியாத மனம் நிலாவினுடையது.
“நானும் அதை தான் சொல்லணும் அம்மு.” என்றவன் நிலாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“அம்மு” என்ற ஒற்றை வார்த்தையின் உடைந்துவிட்ட நிலா. “அண்ணா நான் உன் தங்கச்சி என்னைக்கும் தப்பா போக மாட்டேன், இவ்வளவு நாள் என்னோட உலகம் நீங்க தான், இனி அவரும் அந்த உலகத்துக்குள்ள வந்துட்டாருன்னு புரிஞ்சுக்கிக்கற அளவுக்கு பக்குவம் இருக்குன்னா, உன் மனசு கஷ்டப்படற மாதிரி எதும் பண்ண மாட்டேன்ண்ணா” என்றாள் உடைந்த குரலில்.
“அது போதும்டாம்மா. போய்ட்டு வா..’
“அண்ணா”
“என்னடாம்மா..?”
“என்னைய நீ ஆசீர்வாதமே பண்ணலையே” என கரகரக்கும் குரலில் கேட்டவளை தலையில் தடவி விட்டவன்.
“ஷாலு வா” என அவளை அருகில் அழைத்து நிற்க வைத்தவன், தலை தடவி ஆசீர்வாதம் பண்ணப் போக அவன் கையைப் பிடித்தவள், “நான் அவரையும் கூட்டிட்டு வரேன் அண்ணா எனக்கு உங்க எல்லோருடைய ஆசீர்வாதமும் வேணும்”. என்றாள்.
“அம்மு நடக்கற விசியத்தைப் பேசு”
“அஞ்சு நிமிஷம் நில்லுங்க, நான் அவரோட வரேன்” என துள்ளிக் குதித்து ஓடினாள். அண்ணன் பேசிவிட்ட சந்தோஷம் அவள் துள்ளலில் தெரிந்தது..
வளவன் முகத்திலும் இத்தனை நாள் இருந்த சோர்வு நீங்கி, தங்கை பிழைத்துக் கொள்வாள் என்ற நிம்மதி வர,மனைவியை சந்தோசமாகப் பார்த்தான்.
“வள்ளு..”
“ம்ம்”
“இன்னைக்கு இருக்கும் போலையே” என அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் சொல்ல
“ம்ம் இருக்கு..”
“தங்கச்சி சொல்லலைன்னா”
“அப்போவும் இருக்கும்” என்றவன் அவளை நெருங்கி நின்றுக் கொண்டான்.
“நம்பிட்டேன்”. என்றவளுக்கு அவ்வளவு சந்தோசம்.
எப்படியும் நிலாவை நினைத்து கவலைப்பட்டு அவனையும் வருத்தி தன்னையும் வருத்தப் போகிறான் என எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அனைத்தும் மாற்றம் ஆனால் சந்தோசம் உருவாகும் தானே..
மேலே அறைக்குப் போன நிலா தயங்கி தயங்கி நிற்க, ரோகனின் கோப்புகளை ஆராய்ந்துக் கொண்டிருந்த நந்தன் அவள் வருகையில் நிமிர்ந்து பார்த்தான்.
அந்த பார்வையே நிலாவைக் கொள்ளைக் கொண்டது. பட்டு வேட்டி சட்டையில் ஆளை அசரடிக்கும் ஆணழகனாய் அமர்ந்திருந்தான்.
“என்னடி பால் எதும் எடுத்துட்டு வரல.?”
“உங் உங்ககிட்ட ஒன் ஒன்னு கேக்கணும்”
“கேளு” என்றவன் கோப்புகளை எடுத்து வைத்துவிட்டு அவளின் அருகில் வந்தான்.
“சொன்னா கோவப்பட மாட்டீங்களே?”
“அது நீ சொல்றதைப் பொறுத்து இருக்கு.”
“பெரியவீங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணும்”
“அதான் நேத்து வாங்குனமே”
இதை தான் சொல்வான் என்று நினைத்திருந்தவளுக்கு இதழின் ஓரம் புன்னகை அரும்பியது. அவனை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறாள் என்று.
“என்னடி சிரிக்கிற?” அவளின் சிரிப்பில் தன்னை தொலைத்துக் கொண்டே கிறக்கமாக கேக்க.
“இல்லை இன்னைக்கும் வாங்கணும் வர்றீங்களா ப்ளீஸ்”
“யார் கிட்ட வாங்கணும்?”
“அத்தை மாமா ஆயா தாத்தா..” என்று வேகமாக சொன்னவள், “அப்புறம் எங்க அம்மா அண்ணா அண்ணி” என்றாள் மெதுவாக.
“முதல் பாதி ஓகே அடுத்த பாதி நோ சான்ஸ்”.என்றான்
உடனே மலர்ந்த முகம் நெருப்பு பட்டது போல் வாடிப் போக.அவளின் முகம் மாற்றம் அவனையும் பாதிக்க தான் செய்தது. அதுக்காக வளவனின் காலில் விழுவதா.? அவனின் அகந்தை, தான் தான் பெரிது என்ற கர்வம், கவுரவும், தகுதி அனைத்தையும் துறந்து அவளிடம் மண்டியிட தயாராக இருக்கிறான். அதற்காக அடுத்தவர்களிடம் மண்டியிட முடியாது. நிலா என்ற பூந்தளிருக்காக அவனது அகந்தை அழியும் அடுத்தவருக்காக அவன் சிறு முடிக் கூட அசையாது என திமிர் பிடித்தவன்.
“இங்க பாரு வியா உனக்காக ஆசீர்வாதம் வாங்க கூட வரேன் அவன் காலையிலா விழ முடியாது.”
“அண்ணா கால்ல வேண்டா அம்மா கால்ல அவங்க பெரியவீங்க தானே’ என தயக்கத்துடன் கேட்டாள்.
கல்யாணம் ஆனதுமே ராஜியின் காலில் விழ வேண்டும் என ஆசையாக அவரைத் தேட, அவர் யாருக்குமே ஆசீர்வாதம் வழங்க மாட்டேன் என்று ஒதுங்கி நின்றுக் கொண்டார். கூட்டத்தில் வற்புறுத்வும் முடியவில்லை. இப்போதாவது ஆசீர்வாதம் வாங்க எண்ண நந்தன் முரண்டு பிடிக்க, என்ன தான் செய்வாள் அவள்?.
“உங்க அம்மா கால்ல விழணும்”
“ம்ம்”
“சரி அதுக்கு எனக்கு என்ன கிடைக்கும்?”
“அவங்க ஆசீர்வாதம்”
“அது இல்லாம”
“வேற என்ன வேணும்?”. என்றவளை நோக்கி விரல் நீட்டியவன்
“எனக்கு நீ வேணும்..” பட்டுபுடவை சரசரக்க, கை வளையலும், கால் கொலுசின் சத்தமும், நந்தனின் உணர்வுகளை தறிக் கெட்டு ஓடச் செய்தது,அவனும் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறான் ஆனால் அவள் அருகில் இருக்கும் போது அதற்கு வாய்ப்பே இல்லை என அடிக்கடி தோல்வியை தழுவுகிறான். நந்தனுக்கு தோல்வியா என்றால் அது நிலாவிடம் மட்டும் தான்.
“அது..”
“தரமாட்டியா?” அவன் கேட்ட விதத்தில் எதிர்காலமாவது விளக்கமாவது அனைத்தும் ஓரம் ஓடிப்போக..
“உங்களை நம்பி தாலியே வாங்கிட்டே என்னைய குடுக்க மாட்டனா?” என்றாள் தலை குனிந்து மெல்லிய குரலில்.
அதீத சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே என்று சொல்வார்கள் பாவம் நிலாவிற்கு அது தெரியவில்லை.
அந்த வார்த்தைக்காக எதையும் செய்வான். ஆசீர்வாதம் வாங்க மாட்டானா?
“சரி போலாம் வா”
“உண்மையாவா?” என்பது போல் அவன் முகத்தைப் பார்க்க.
“இந்த மூளையும் இந்த மனசும் என்னைய மட்டும் யோசிச்சிதுன்னா எதையும் செய்வான் இந்த நந்தன்” .என்றவன் அவளை தூக்கப் போக
“வேண்டா வேண்டா கீழே எல்லோரும் இருக்காங்க”.
“இப்போதான் சொன்னேன்”
“நாளைக்கு மாத்திக்கறேனே”
“வா “ என அவள் கையோடு கைக் கோர்த்துக் கொண்டு கீழேப் போனான்.
மேலேப் போனவள் ஆளையேக் காணவில்லை என அனைவரும் மாடிப் படியையேப் பார்க்க, இருவரும் ஒன்றாக இறங்கி வந்தனர்.
மார்த்திக்கு தெரியும் மேலேப் போன நிலா நந்தன் இல்லாமல் வரமாட்டாள் என்று, மகனின் நிலையைப் பார்த்து தந்தையாக மனம் மகிழ்ந்து போனார்.
யுகி பெங்களூரு போய் சேர்ந்துவிட்டானா? என மணிக்கு ஒரு தடவை அழைத்து விசாரித்துக் கொள்ளவும் மறக்கவில்லை.
கீழே இறங்கி வந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முகத்தைப் பார்க்க. நந்தன் பேச மாட்டான் என நிலாவே பேசினாள்.
முதலில் கிருஷ்ணமாளிடம் ஆசீர்வாதம் செய்ய சொல்ல. அவர் பேரனுக்கு மட்டும் தனியாக ஆசீர்வாதம் செய்தார். கிருஷ்ணமூர்த்தியால் எழுந்து பேச முடியாது என்பதால் அவரது காலைத் தொட்டு வணங்கிக் கொண்டனர்.
மார்த்தியிடம் நந்தனும் மணியிடம் நிலாவும் காலில் விழப்போக கடைசி நொடியில் அவனை மணியின் பக்கம் தள்ளி விட்டுவிட்டாள் நிலா.
வந்தப்பின்பு எப்படி விழாமல் இருப்பது? என மணியின் காலைத் தொட்டு வணங்க, மணியின் கண்ணீர் துளிகள் அவன் முதுகில் பட்டு தெறித்தது.
நிமிர்ந்து பார்த்தவன் அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
மணியின் கண்ணீரைக் கண்டுக் கூட மனம் இலகி பேசாமல் போவனை, என்ன மனுஷனோ என்று தான் நினைக்கத் தோன்றியது நிலாவிற்கு
அடுத்து ராஜியின் அருகில் சென்று நிற்க
அவரோ விலகி தூணின் மறைவில் நின்றுக் கொண்டவர். “வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது என் கால்ல விழ வேண்டாம்” என்றவரை கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நிலா.
“நீ மட்டும் ஆசீர்வாதம் பண்ணலைன்னா நான் இங்க இருந்து போக மாட்டேன். ஒழுங்கா பண்ணும்மா”.
“வேண்டா அம்மு அப்பறம் உன் வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை வந்துடுச்சுன்னா குற்றவுணர்ச்சில செத்துடுவேன்” என்றார்.
“என்ன பேசறீங்க நீங்க?. உங்களைய விட யார் நாங்க நல்லா இருக்கணுன்னு நினைக்கப்போறா?. உங்க ஆசீர்வாதம் தான் முக்கியம். பண்ணுங்க”
“இல்லைங்க தம்பி” என அவர் தயங்க,”அவ தான் வேண்டாம்ன்னு சொல்றாள, தம்பி விடு” என கிருஷ்ணமாளும் பேச வர கையை நீட்டி தடுத்தவன். “நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க” என சட்டென்று அவரின் காலில் விழுந்துவிட. நிலா விழாமல் இருக்கவும் அவளின் கையைப் பிடித்து இழுத்து விழ வைத்தான்.
“ம்ம் நல்லா இருங்க சீக்கிரம் பேரப்புள்ளைய கையில குடுங்க”என இருவர் தலையிலும் கை வைத்து சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டார்.
எத்தனை வருடங்கள் போனாலும் இந்த மூட நம்பிக்கை மட்டும் மாறவே மாறாது. கணவனை இழந்து விட்டால் நல்ல நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்தில் சொல்லிருக்கிறதோ பெண்களுக்கு மட்டும் தானே இதுபோன்ற கட்டுப்பாடுகள். ஆண்களுக்கு ஏன் அதுபோன்ற கட்டுப்பாடுங்கள் விதிக்கவில்லை இந்த சமூகம்..
இருவரும் வளவன் ஷாலினியின் அருகில் வர.
“காலையிலா விழ வேண்டாம் அம்மு எப்போவும் சந்தோஷமா இருக்கனும்”என வளவன் நிலாவின் தலையில் கை வைத்து சொல்ல.
“ஓ கால விழனும்னு ஆசை வேற இருக்கா.. ஏய் நான் உன் அண்ணன் தானே கால விழுந்தியா? அவங்க எப்படி பாசமலர் படம் ஓட்டுறாங்க. உனக்கு அதுல கொஞ்சம் கூட ஓட்ட தெரியாதா?” என்றான் ஷாலினியின் காதை திருகி.
“என்னைய சொல்ற நீ செஞ்சியா?” என ஷாலினி சந்தோசமாக் கேட்டாலும், நந்தனின் காலில் விழுந்து விட்டாள்.
“சும்மா சொன்னேன் ஷாலு எழுந்திரு”என நகர்ந்தவன்.
“கால்ல விழுற படலம் முடிஞ்சிருச்சுன்னா நான் ரூமுக்கு போகவா?” என்றான் நிலாவைப் பார்த்து.
அவள் வெட்கத்துடன் தலையை அசைக்க.
“பாலை எடுத்துட்டு சீக்கிரம் வந்து சேரு” என அவள் காதில் சொல்லிவிட்டு மேலே அறைக்குச் சென்று விட்டான்.
அவன் போனதும் வளவனும், ஷாலினியும் ராஜியின் காலில் விழ.. அவர் ஆனந்த கண்ணீருடன் வாழ்த்தினார்.
ஒவ்வொருவராக தூங்க செல்ல.வளவனும் ஷாலினியும் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டனர்.
பாலை எடுத்துக் கொண்ட நிலாவிற்கு இப்போது தான் கால்கள் பின்னத் தொடங்கியது.
ஒரு வேகத்தில் சம்மதம் சொல்லிவிட்டாள் அதை இப்போது நினைக்கும் போது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
அவனின் ஆளுமையை நினைத்து உடலுக்குள் குறுகுறுப்பு எழ.. எதை அடக்குவது என தெரியாமல் பயந்து பயந்து அறையின் வாசலில் நின்றாள்.
இவ்வளவு நேரம் வரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்போது நந்தன் பேசியப் பிறகு இந்த இரவின் இனிமையை நினைத்து நரம்புகள் துடியாக துடிக்க. கதவின் மீது கையை வைத்தாள்.
அது டப்பென்று திறந்துக் கொண்டது.
“உஷா காம் டவுன் ஐஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்” என போன் பேசிக் கொண்டே வெளியே வந்த நந்தன்.நிலாவைப் பார்த்ததும் “வெயிட் பண்ணுடி போய்ட்டு உடனே வந்துடுவேன்” என்றான்
அவளும் தலையை தலையை ஆட்ட..
வேகமாக இறங்கி சென்று விட்டான்.
இவ்வளவு நேரம் இருந்த உணர்வின் தழும்பலில் யாரோ நீரை ஊற்றி அணைத்ததுப் போல் அனைத்தும் அடங்கி விட்டது.
படுக்கையில் சென்று விழுந்தவள்.
“எதுக்கு நிலா ஆசைப்படற.?ஆசைப்படற எது உனக்கு கிடைச்சிருக்கு?” என அவளுக்கு அவளே சொல்லிக் கொள்ள.
“போய்ட்டு வந்துடுவாங்க” என மனம் சமாதானப் படுத்திக் கொண்டாள்.