Total Views: 1585
“நிலா”
“சொல்லும்மா”
“மாப்பிள்ளை வந்துடாரா?”
“ம்ம் இப்போதான் வந்தாரு டிரஸ் மாத்திட்டு இருக்காரு”.
“ம்ம் இந்த சூப்பை மாப்பிள்ளைக்கு குடுத்துட்டு வா.”
“அவர் சூப்பு குடிக்க மாட்டாரா, காலையில அண்ணாவுக்கு குடுக்கும் போது கேட்டேன், வேண்டாம்னு சொல்லிட்டாரு” என நைசாக நழுவி விட்டாள்.
அதைக் கொடுக்கப் போய் யாரு அவனிடம் மாட்டுவது என்று தான் அப்படி கூறினாள்.
கெடா விருந்து அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. மார்த்தி வருபவர்களை உபசரித்துக் கொண்டிருக்க.
வளவன் ஷாலினி நிலா, கவிநிலா என சிறுவர்களின் பட்டாளம் தனியாக நின்று அரைட்டை அடித்துக் கொண்டிருந்தது.
அறையில் இருந்து வந்த நந்தனின் கண் நிலாவை தேட.
“ஏய் அம்மு அண்ணா உன்னையத் தேடுறான், ஓடிப் போ இல்லனா எங்களையும் நிம்மதியா பேச விடமாட்டான்.”
“நான் போகலப்பா, உடனே ரூமுக்கு வா,அது எடுத்து குடு இது எடுத்துக் குடுன்னு வேலை வாங்குவாரு”
“பொய் சொல்லாதடி. அவன் மேலே பாஞ்சிடுவானு தானே போக மாட்டிங்கிற” என நிலாவின் காதில் ரகசியம் பேச,நிலாவின் முகம் சட்டென்று சிவந்துவிட்டது.
“ஏய் என்னடி இது.. அவனைப் பத்தி பேசுனாலே இப்படி சிவந்து போற?”.
“தெரியல ஷாலு” என்றவளுக்குமே அதற்கான காரணம் தெரியவில்லை.
நிலா இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்ட நந்தன் அவளை நோக்கிச் செல்ல, அவன் தன்னை நோக்கி தான் வருகிறான் என்றதுமே மேலும் சிவந்து போனாள்.
அவளின் முக சிவப்பை பார்த்த வளவன், “அம்மு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? ஏன் இப்படி மூஞ்சிலா சிவந்து போயிருக்கு காய்ச்சல் அடிக்குதா சொல்லு ஹாஸ்பிடல் போலாம்” என்றான்.
“கூறுக்கெட்ட மனுஷனுக்கு ஒன்னுமே தெரியல “ என ஷாலினி தலையில் அடித்துக்கொண்டு அவன் காதில் சிவப்பிற்கான காரணத்தை சொல்ல
“எனக்கு என்னடி தெரியும்? என் பொண்டாட்டியும் என்னைய பார்த்து இப்படி சிவந்து போனா தெரிஞ்சிருக்கும், அவ அப்படினா எங்க விக்குதுன்னு கேக்கற அப்புறம் எனக்கு எப்படி தெரியும்.?”
“என்ன என்னைய கலாய்க்கிறிங்களா?”
“மேபி” என்றவனின் போன் அதிர யுகி தான் அழைத்திருந்தான்.
யுகி கூப்பிடறான் என தள்ளிப் போனவனின், கையைப் பிடித்த நிலா நந்தனை பார்த்தாள்.
அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனிடம் உறவினர் ஒருவர் பேச, அவரிடம் பேசிக் கொண்டே அங்கையே நின்று விட்டான்.
“அண்ணா நான் யுகிகிட்ட பேசறேன், ப்ளீஸ்”
“வேண்டா அம்மு அவன் சத்தம் போடுவான்”
“பரவாயில்ல என்னோட யுகி தானே நான் பார்த்துக்கறேன்” என அவனிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டு யாரும் இல்லாத இடத்திற்கு ஓடிவிட்டாள்
நந்தனின் பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை நிலாவிடம் எப்போதும் இருக்கும் என்பதை நிலா மறந்து விட்டாள், யுகியிடம் பேசும் ஆர்வத்தில் அதெல்லாம் எங்கு நியாபகம் வைத்துக்கொள்ள.
அவள் போகும் இடமெல்லாம் நந்தனின் பார்வையும் தொடர்ந்தது.
“போனை எடுக்க இவ்வளவு நேரமா?புதுசா கல்யாணம் ஆனதும் என்னைய மறந்துட்டியா..? நீயே மறந்துட்ட பூனை என்னைய நியாபகம் வெச்சிருக்கப் போறாளா? உனக்கு ஒன்னு தெரியுமா? அவ என்னைய பிளாக் பண்ணிருக்கா, அவ இவ்வளவும் பண்ணி நான் அவளை பிளாக் பண்ணலையேடா, அவ மட்டும் ஏண்டா என்னைய பிளாக் பண்ணுனா?” என்றவனின் குரலில் தான் எத்தனை வேதனை..
அதைப் புரிந்துக் கொண்டவளுக்கு இதயம் வலித்தது.ஒருவரின் உணர்வின் வலியைப் புரிந்துக் கொள்ள. காதலர்களாக தான் இருக்க வேண்டுமா என்ன?”.
“யுகி.. “ என்று மென்மையாக அழைத்தாள்.
அவள் குரலில் அப்படி ஒரு தாய்மை.
தாய்மை அடைந்தவர்களுக்கு தான் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்பதில்லை.யுகியை தாய் போல் பார்த்துக்கொண்ட நிலாவிற்கும் அந்த உணர்வு இருக்கும்.
அவள் குரல் கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த வீம்பு எல்லாம் உடைந்து “பூனை” என்றான்.
உண்மையான அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லையே,
எவ்வளவு கோவமும் வருத்தமும் இருந்தாலும் அவள் குரலை இரண்டு நாட்கள் கேக்கவில்லை என்றதும் அனைத்தையும் மறந்து அவன் பூனையிடம் பேசிவிட்டான்
“ஏண்டா என்கிட்ட பேச மாட்டிங்கிற? உன்னைய ரொம்ப மிஸ் பண்றேன்டா, நீ இல்லாம தனியா இருக்க மாதிரி இருக்கு எப்போடா வர..?” என அழுதே விட்டாள்.
“சீக்கிரம் வரேன்”.
அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும், இவ்வளவு நாள் மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் பேச வேண்டும், அப்போது தான் அவள் மனம் நிம்மதி அடையும்.
“உன்கிட்ட நான் நிறைய பேசணும் யுகி. எவ்வளவு கோவம் இருந்தாலும் என்னைய விட்டுட்டுப் போயிடாதடா, நீ இல்லனா நான் என்ன ஆவேன்னு எனக்கே தெரியல, உன்கிட்ட பேசாம உன்னையப் பார்க்காம என்னால இருக்க முடியல, நான் சாஞ்சிக்க உன் தோள் வேணும்டா”
“சரி வரேன் அழாத” அவள் ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவதை தாங்க முடியாமல் கோவம், வருத்தம் காதலில் தோற்றுப் போன வலி என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு “வரேன்” என்று விட்டான்.
“எப்போ வர?”
“சீக்கிரம் வரேன்”
“இதையே சொல்லாத, இப்போவே வா” என குழந்தையாக அடம் பிடித்தாள்.
“இப்போவே எப்படி முடியும்?”
“வரணும்.வந்து தான் ஆகணும்”
“சரி நாளைக்கு வரப் பார்க்கறேன்”
“இன்னைக்கு நைட் கிளம்பி காலையில வந்து நிற்கர நான் உன் முகத்துல தான் முழிக்கனும்” என எப்போதும் போல் இன்றும் அடம்பிடித்தாள்.
நிலாக் கேட்டு அவன் மறுத்த ஒன்று நந்தன் மட்டும், அதுவும் கிடைத்தவிட்ட போது மற்றதுக்கு இல்லை என்று சொல்லுவானா
“சரி” என அந்தப் பக்கம் யுகி சிரித்து விட்டான்.
“ஐ மிஸ் யூ டா”
“நானும் தான் உன்னைய ஒரேடியா மிஸ் பண்ணிட்டேன்”
“என்ன சொன்ன?”
“ஹா மிஸ் பன்றேன்னு சொன்னேன்”
“ம்ம்” என்றவளுக்கு யுகி பேசிவிட்ட சந்தோசத்தில் பூரித்துப் போனாள்.
“எதுக்கு என் நம்பரை பிளாக் பண்ண?”
“நானா? நான் எதுக்குடா பிளாக் பன்றேன்? நான் கூப்பிட்டுட்டே இருந்தேன் நீதான் எடுக்கவே இல்லை”.
“ஒ அப்போ அது அந்த நாயோட வேலையா இருக்கும்.” எனப் பல்லைக் கடித்தான். அதை அவளிடம் சொல்ல வில்லை.
அவனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது . இதனால் அவனது பூனை தான் பாதிக்கப்படுவாள்.என்ற எண்ணம்.
“சரி உன்னோட நம்பருக்கு கால் பன்றேன் பிளாக்ல விழுந்துருக்கான்னு பாத்துக்கோ. நைட் வரணும்ன்னா இப்போ வேலைப் பார்க்கணும் போய் பார்க்கட்டுமா?”
“ம்ம்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு சந்தோசமாக திரும்ப அங்கு நந்தன் நின்றிருந்தான்.
அவ்வளவு தான் நிலாவிற்கு நாடி நரம்பெல்லாம் வெடிப்பது போல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
நந்தன் முகத்தில் அவ்வளவு இறுக்கம்.பெங்களூரில் இருந்து இங்கு வந்த நாளில் இருந்து அவ்வளவு இறுக்கத்தை அவள் பார்க்கவில்லை. இன்று பார்க்கவும் பதறி விட்டாள்.
“அதுங்க...”
“ரூமுக்கு வா” அழுத்தமாக சொல்லிவிட்டு சென்று விட்டான்.
அவன் அறைக்கு அழைத்ததும் இன்னும் பதறியது உள்ளம்.. “என்ன என்ன கேட்டானோ? நான் வேற மிஸ் யூடா நீ இல்லாம இருக்க முடியலைன்னு வேற பேசி வெச்சிருக்கேன்”. என்றவள் பதட்டத்தைக் குறைக்க அங்கும் இங்கும் சிறிது நேரம் நடந்தாள்.
“நிலா தம்பி வந்துடுச்சில வந்து சாப்புடுங்க” என ராஜியும் மணியும் மாறி மாறி அழைக்க.
“ரூமுக்கு போய்தான் கூட்டிட்டு வரணுமா?, கொஞ்ச நேரம் கழிச்சிப் போனாவது கோவம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும் பெருசா பேச மாட்டாரு. இப்போவே போனா கண்டபடி பேசுவாரே”.என நகத்தைக் கடிக்க..
“என்ன பழக்கம் அம்மு இது? நகத்தை கடிச்சிட்டு”.
“ஹா அண்ணா அது டென்ஸ்டா இருந்தனா அதான்”.
“அப்படி என்ன டென்சன்?”
“ஹா யுகி பேசலைல அதான்₹ என வாய்க்கு வந்ததை உளறியவள். “இந்தா உன்னோட போன்” என அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அறைக்குப் போய் நந்தன் பேசும் வார்த்தைகளை கேட்டு அவனை அழைத்து வந்து சாப்பிடுவதற்குள் அவளது ஜீவன் போய்விடும்.
மாடி படியில் காலை வைக்க அவளுடைய போன் அலறியது.
யார் என பார்க்க புது எண்ணாக இருந்தது. “இது யாருடா புதுசா இருக்கு ஒருவேளை பிளாக் பண்ணிருக்குன்னு யுகி தான் வேற நம்பர்ல இருந்து கூப்பிடறானோ” என எண்ணிக் கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைக்க
“ஹெலோ நான் உஷா பேசறேன்”.என்றாள்.
“இவளா? இவ எதுக்கு எனக்கு கால் பண்றா?”
“எந்த உஷா? எனக்கு தெரியலையே?”.
“ஓ தெரியலையா இதை சொன்னா கண்டிப்பா தெரிஞ்சிடும்” என்றவள் “உன்னோட இந்நாள் கணவனோட முன்னாள் காதலி.”
“முன்னாள் காதலிதானே அவருக்கு முன்னால் காதலி ஆயிரம் பேர் இருப்பாங்க, அவங்க எல்லார்த்தையும் நியாபகம் வெச்சிக்க முடியுமா?, நீ எந்த காலத்து காதலின்னு சொல்லு நியாபகம் இருக்கான்னு சொல்றேன்” என முகத்தில் அடித்ததுப் போல் பேசினாள்.
நிலாவிடம் நந்தனை தவிர வேற யாரும் வால்லாட்ட முடியாது.பட்டென்று பேசிவிடுவாள்.
“அவ்வளவு சீக்கிரம் என்னைய மறந்துட்டியா? சரி போ, நந்தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வந்துருந்தேனே”.
“அதைவிட.. அன்னிக்கு என்னைய பேக்கரில பார்த்துட்டு லவ் பண்றியான்னு கேட்டு அவர்கிட்ட பேச்சு வாங்கிட்டு போனியே, அதை சொல்லிருந்தா இன்னும் பெட்டரா நியாபகம் வந்துருக்கும்.”
“கொழுப்பெடுத்தவ” என அந்தப் பக்கம் உஷா பல்லைக் கடிக்க.. நிலா அவளை கடுப்படித்துவிட்டோம் என திருப்தி அடைந்தாள்.
“ஹெலோ லைன்ல இருக்கியா? எதுக்கு கால் பண்ண அதை சொல்லு?”.
“என்ன என்னைய கடுப்படிச்சிட்டோம்ன்னு சந்தோசமா இருக்கியா? இப்போ வரைக்கும் நந்தன் என்னோட தான் இருந்தாரு தெரியுமா உனக்கு?”.
“தெரியும் என் புருஷன் என்கிட்ட சொல்லிட்டு தான் எங்கையும் போவாரு அதுக்கு இப்போ என்ன? எத்தனை வேசிங்க அவரை சுத்தி இருந்தாலும் என் புருஷன் ஸ்ரீ ராமன் தான்” நந்தனை அம்மா அண்ணன்கிட்டையே விட்டுக் குடுக்க மாட்டாள் கண்டவளிடமா விட்டுக் கொடுப்பாள்?.
நிலா வேசி என்றதில் உஷாவின் முகம் கோவத்தில் சிவந்து விட்டது. ‘உன் வாழ்க்கையை அழிக்காம விட மாட்டேன்டி’ என உள்ளுக்குள் சபதம் எடுத்தவள்.
“ஒ உங்கிட்ட சொல்லிட்டு தான் என்கூட வந்து குடும்பம் நடத்துறானா?,அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீ எந்த பிரச்சனையும் பண்ணாம விலகிப் போய்டுவ”.
“நான் எதுக்குப் போகணும்?”.
“நந்தன் என்னோட குடும்பம் நடத்தும் போது உனக்கு என்ன வேலை?.நீ டிவோர்ஸ் வாங்கிட்டு போயிட்டே இரு’
“அவர் கையால ஊர்ல முன்னால உரிமையா தாலிக் கட்டிட்டு குடும்பம் நடத்துறது நான் தான்.எப்போமே அவருக்கு ஒரே பொண்டாட்டி நான் மட்டும் கண்டவளா வந்து உரிமை கொண்டாடுனா விட்டுட்டு விலகி நிற்பேன்னு நினைச்சியா? வேணும்னா நீ போடி..”
“ஏய் வாடி போடின்ன பல்லைத் தட்டிடுவேன், நந்தன் எனக்கு மட்டும் தான் சொந்தம் அவனே சொல்லி உன்னைய தொறத்த வைக்கல நான் உஷா இல்லைடி..”
“உஷா இல்லனா பைத்தியம்ன்னு வெச்சிக்கோ மூடிட்டு போனை வை நிலா எப்போமே இப்போ மாதிரி அமைதியா பேசிட்டு இருக்க மாட்டா..” என அலைபேசியை அணைத்தவள்,
“எவ்வளவு தைரியம் இருந்தா அவளுக்கு தான் சொந்தம்ன்னு சொல்லுவா..இந்த அளவுக்கு பேசறான்னா இவன் கொடுத்த இடம் தான் எல்லாம், இதுல என்னைய திட்ட கூப்பிடறான் இருடா வரேன்” என அறைக்கு வேகமாக போனாள்.
அறையைத் தொடும் வரைக்கும் இருந்த அதீத தைரியம் கதவில் கை வைத்ததும் புஸ்சென்று போய்விட்டது.
மெதுவாக திறந்தவள். “உங்களைய சாப்பிடக் கூப்பிடறாங்க” என்றாள் மெதுவாக
இவ்வளவு நேரமும் உஷாவை நார் நாராக கிழித்து தொங்க விட்டது என்ன?இப்போது வார்த்தைக்கு வலிக்குமோ என்பது போல் பேசுவது என்ன?.
நிலா நடிக்கிறாளா என்றால் அவள் சுபாவமே அதுதான் நந்தன் என்று வந்துவிட்டால் விட்டுக் குடுக்கவும் மனம் வரவில்லை அவனிடம் குரலை உயர்த்தவும் தைரியம் வரவில்லை.
“என்னடி நடிக்கிறியா?” என நந்தனின் குரல் எஃகு போல் இறுக்கமாக வந்தது.
“என்னங்க..?”
“என்ன நொண்ணங்க?, அதெப்படிடி நேத்து நைட் என்னோட உருகி உருகி ஒன்னா இருந்துட்டு, காலையில அவன்கிட்ட நீ இல்லாம என்னால இருக்க முடியலைன்னு பேசற.. ஒரே நேரத்துல அண்ணன் தம்பி ரெண்டுப் பேருக்கிட்டையும் இப்படி பேச முடியுமா?
“தப்பா பேசாதீங்க அவன் எனக்கு குழந்தை மாதிரி, நான் அவனுக்கு குழந்தை மாதிரி”. என நந்தனின் முன் குரல் உயர..
அவளைக் கண்கள் இடுங்கப் பார்த்தவன் “அதுலாம் எந்த கேனையனாவது காதுல பூ வெச்சிருப்பான் அவன்கிட்ட சொல்லு.ஐ மிஸ் யூ என்ன?, நீ இல்லாம இருக்க முடியலைங்கறது என்ன?”
“உண்மையா தான் சொல்றேங்க நம்புங்க. யுகியை இதுநாள் வரைக்கும் அப்படி பார்த்ததே இல்லைங்க புரிஞ்சிக்கோங்க” என கெஞ்சலாக வந்தது வார்த்தைகள்.
“ஆமாடி அப்படி பார்க்காமல் ரெண்டும் பேரும் ஒருத்தருக்காக இன்னொருத்தர் பாகா உருகறீங்க.அவனைக் கொன்னுடுவேன்னு சொன்னதுக்காக தானே என்னைய கல்யாணமே பண்ணிகிட்ட”
“நீங்க மிரட்டினீங்க”
“அவனை இடையில கொண்டு வராம கல்யாணத்துக்கு கேட்டுருந்தா சரின்னு சொல்லிருப்பியா?”
கண்டிப்பாக மாட்டாள் தானே அவன் மிரட்டுவதற்கு முன்பு அவளை திருமணம் செய்துக் கொள்கிறேன் என சொன்னப் போது பயத்தில் காய்ச்சல் கண்டு நந்தனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என அடம்பிடித்தவள் தானே. உண்மை விளிம்பி நிலா, “ இல்லை” என்று தலையை ஆட்ட
“அட்ராசக்கைன்னான்னா அப்போ அவனுக்காக,புடிக்காத என்னைய கல்யாணம் பண்ற அளவுக்கு வந்துருக்கன்னா உனக்கும் அவனுக்கும் இடையில எதுமே இல்லைன்னு சொன்னா நான் நம்பனுமா”
“இப்போ என்ன சொல்ல வரீங்க.?”
நிலாவின் முன் டேபிளில் இருந்து ஒரு நோட்டை எடுத்து தூக்கி ஏறிந்த நந்தன்.
“இது என்னடி சொல்லு?குழந்தை தான் இப்படி எழுதி வைக்குமா?” என்றான் கோவத்தில் கண்கள் சிவக்க.
“இது என்னன்னா எனக்கு என்ன தெரியும்?” என அவள் நோட்டை எடுத்துப் பார்க்க.
பக்கத்துக்கு பக்கம் ஐ லவ் யூ நிலா, நிலா நிலா என வண்ணம் வண்ணமாக எழுதி அம்பு விட்டிருந்தான் யுகி.
அதைப் பார்த்த நிலாவின் கண்கள் நிலைகுத்தி அப்படியே நின்றது அவளது யுகியா இது?. தன்னை காதலித்தானா..? புரியவில்லை. நிலாவிற்கு, இதுநாள் வரையிலும் அவன் பார்வையில் கூட தவறு கண்டதில்லை நிலா, பிறகு எப்படி.
“என்ன பார்க்கற.. அவன் உன்னைய லவ் பண்ணிருக்கான்.”
“பைத்தியம் மாதிரி பேசாதீங்க.”
“ஒ இப்போ நான் பைத்தியம் வேற. ஆகிட்டனா..?”
“அதில்லங்க...”
“வேற எதுங்க? அவனை சொன்னதும் என்கிட்டையே குரலை ஒசத்துற.. ம்ம் என புருவம் உயர்த்த
“ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க.”
“எனக்கு எல்லா தெரியும்டி. அவன் உன்னைய லவ் பன்றான். அதுக்கு தான் இந்த கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னான் , நீயும் அதுக்கு தகுந்த மாதிரி, நீ இல்லான என்னால இருக்க முடியாது, இன்னொரு தடவை குடிச்சின்னா என் உடம்புல உயிர் இருக்காதுன்னு டைலாக் பேசிட்டு இருக்க, இடையில இருக்க நான் என்ன பைத்தியமா? என அறை அதிர கத்தினான்.
இருவரின் அன்பையும் இவ்வளவு கேவலமாக பேசுகிறான் என்றதும்.
நிலாவிற்கு வெறுத்துப் போனது, இவனிடம் எதற்கு தங்கள் அன்பை நிரூபிக்க வேண்டும் என்ற கோவம் கூட வந்தது.. ஒரு தாயையும் மகனையும் சந்தேகப்படுவது போல் அல்லவா பேசுகிறான் .
இதுநாள் வரையிலும் நிலாவின் மனதில் அப்படி ஒரு எண்ணமே வந்ததில்லை. யுகி நிலாவை தாங்கும் போதெல்லாம் தகப்பனிடம் கிடைக்காத அன்பை இவன் கொட்டி கொடுக்கிறான் என்று தான் நினைத்தாள். அதனால் தானோ என்னவோ யுகியிடம் அவள் மனம் போகவேயில்லை. அவனுக்கு ஒன்று என்றால் இப்போது மட்டும் அல்ல எப்போதுமே நிலாவால் தாங்க முடியாது. அந்த அன்பு காதலாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, எந்த எதிர்பார்ப்பு இல்லாத தூய்மையான அன்பிற்கு இன்னும் இந்த உலகில் பெயர் வைக்கவில்லை.
யுகியின் அன்பை சந்தேகப்பட்டு விட்டான் என்று கோவத்தின் உச்சில் இருந்தவள்.
“உனக்கு ஒரு மண்ணும் தெரியாது , போடா.யுகியைப் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு மொதல்ல, . என்னைய சொல்றியே நீ முதல்ல உஷாவைப் பத்தி சொன்னியா..?இப்போ அவ வந்து உன் புருஷன் எனக்கு தான் சொந்தம்னு சொல்றாள, அதுக்கு முதல்ல பதில் சொல்லு.அப்பறம் எங்களை சந்தேகப்படுவ” என மரியாதை காற்றில் பறக்க கேட்டவளை கன்னம் கன்னமாக அப்ப வேண்டும் போல் வெறியாக இருந்தது நந்தனுக்கு.அவளை அடிக்க முடியாத கோவத்தை அருகில் இருந்த கண்ணாடியில் காட்டி அதை தள்ளிவிட்டவன்.
“அவ தான் கேக்கறால உன் புருஷனை விட்டுக் குடுத்துடுன்னு கொடுத்துடு.” என்றான் சாதாரணமாக.
அவன் கோவமாக சொன்னால் கூட ஒரு தரத்தில் வைக்கலாம், எதுவும் நடக்காததுப் போல் பேசினால் உள்ளுக்குள் எரிமலை கொதித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் அது எப்போதும் வேண்டும் என்றாலும் வெடிக்கலாம்.
“ஒ கொடுக்கணுமா கொடுக்கறேன். உன்னோட வேலை முடிஞ்சதும் கழட்டி விடப் பார்க்கற அதானே..” என்றவளுக்கு அவன் கொடுத்துவிடு என்றதும் கண்ணீர் தாரை தாரையாக வந்தது.
“ஆமா, யூஸ் பண்ணிட்டேன் இனி எனக்கு நீ தேவையில்ல. உன்னைய வெச்சி உன் அண்ணனையும் பழி வாங்கியாச்சி.” என்றவனும் கோவத்தில் என்ன பேசுகிறோம் என அறியாமல் வார்த்தையை விட்டான்.
“ஓ எங்க அண்ணனை பழி வாங்க தான் கல்யாணம் பண்ணியா?”
“எஸ் அப்கோர்ஸ்”
“அப்போ நான் போகணும், நீ அவக் கூட சேர்ந்து கூத்தடிப்ப.”
“நான் என்னமோ பண்றேன் உனக்கு என்ன?”
“அப்போ நான் என்ன பண்ணாலும் உனக்கும் கவலையில்ல..”
“இல்ல போடி.” என்றதும் நிலா கண்களை துடைத்துக் கொண்டவள், நந்தன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.
இதுநாள் வரைக்கும் அவனைக் கண்டு பயந்து நடுங்கியவள் தான், தன் வாழ்க்கையில் விளையாடி விட்டான் என்றதும் ஆத்திரம் கண்ணை மறைக்க , நந்தனை தான் அடிக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல் அடித்துவிட்டாள்.
அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்பது நந்தனின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது.
“இந்த அடி எதுக்கு தெரியுமா சும்மா இருந்தவளோட வாழ்க்கையை நாசம் பண்ணில அதுக்கு, என்னோட மனுசல ஆசையை விதைச்சில அதுக்கு, நீ என்னடா என்னைய வேண்டாம்னு சொல்றது, எனக்கு நீ வேண்டாம் போடா” என்றாள்.
“எவ்வளவு தைரியம்டி உனக்கு?,என்னையக் கண்டா ஓடி ஒளியற சிறுக்கி. என்னையே அடிக்கிற அளவுக்கு வந்துட்டியா, உன்னையும் சும்மா விட மாட்டேன், இதுக்கெல்லாம் காரணமான அவனையும் சும்மா விட மாட்டேன் வெட்டி துண்டு துண்டா எறியல, நான் நந்தன் இல்லடி”
“பண்ணு போ இப்படி மிரட்டி மிரட்டி தானே என் வாழ்க்கையை சீரழிச்சி வெச்சிருக்க..இனியும் நீ சொல்றதை நம்பி ஏமாற மாட்டேன், இன்னும் என்னைய கொல்ல என்ன இருக்கு அதான் ஏமாத்தி உயிரோட கொன்னுட்டியே” என்றவள் கதவை திறந்துக் கொண்டு போய்விட்டாள்.