இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -96 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 30-07-2024

Total Views: 1376

பெற்றவர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடிந்த ஒன்றை நிலாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என அனைவருமே நம்பினர் அந்த அளவிற்கு யுகியின் அன்பு வைத்திருந்தாள் நிலா.

கார் வீட்டை அடையும் முன்னே  நந்தன் காரைப் பார்த்து ஓடி வந்து அவன் அருகில் நின்றாள்.

“எதுக்கு இப்படி ஓடிவர..?”

“நீங்க வரேன்னு சொன்னிங்கள அதான்”

“ம்ம் வண்டியில ஏறு”.

“எங்க போறோம்னு சொல்ல வேண்டாம், இங்க எல்லோரும் எங்க போனாங்கன்னு சொல்லுங்க”

“அதும் தெரிஞ்சிடும்” என்றவன் முகம் பாறையே தோற்றுப் போகும் அளவிற்கு இறுகி இருக்க. நேற்று நடந்த சண்டையில் இன்னும் கோவமாக இருக்கிறான் போல என எண்ணிக் கொண்டாள்.

“நேத்து நான் பண்ணது தப்பு தான்” நிலாவின் வார்த்தைகள் மீண்டும் நந்தனிடம் திக்கி திணறி வர.

அவன் எதுமே பேசவில்லை

“கோவமா இருக்கீங்களா? “



“ப்ளீஸ் பேசுங்களேன்”



“கோவம் போனதும் பேசுவீங்க தானே”. என பாவமாக அவன் முகம் பார்க்க  அவனோ கசங்கிய முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியை ஓட்டினான்.

இதுக்கு மேல் பேசினால் அடித்துவிடுவானோ என்ற பயந்து வாயை மூடிக் கொண்டாள்.ஆனாலும் யாருக்கோ எதுவோ ஆகிவிட்டது என மனம் பிசைந்தது என்னவோ உண்மை.

வண்டி நேராக மருத்துவமனைக்குள் நுழைய.. பதறிவிட்டாள் நிலா.

“என்னங்க யாருக்கு என்னாச்சி சொல்லுங்க..?” என வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனைப் போட்டு உலுக்கி எடுத்தாள்.

காரை  ஒரு இடத்தில்  நிறுத்தியவன் “இறங்கு” என்றான்.

“நீங்க யாருக்கு என்னனு சொன்னாதான் இறங்குவேன்”.

“இறங்குன்னு சொன்னான்”.

“முடியாது”.

“வியா  ஆல்ரெடி பயங்கர டென்ஷன்ல இருக்கேன்,  மேல நீயும் டென்ஷன் பண்ணாத இறங்கு” என அழுத்தமாக  சொல்லவும், நிலா வண்டியை விட்டு இறங்கிவிட்டாள்.

ஆனால் உள்ளே செல்ல பயமாக இருந்தது.யுகியின் போன் எடுக்கவில்லை, மருத்துவமனை  வாசம் என  எல்லாம் சேர்ந்து அடி வயிற்றில் பய பந்தை உருட்டியது.

“வா”

“வரமாட்டேன் யுகிக்கு என்னாச்சு?” 

“உள்ளே வா”

“நீங்க சொல்லுங்க,அப்போதான் வருவேன்”. 

“காயம் பட்டுருக்கு”

“என்ன காயம்? எப்படி காயம்? யார் பண்ணுனா?  சொல்லுங்க?” என நந்தனை போட்டு பிராண்டி எடுக்க,

“உள்ள வந்து பார்த்து தெரிஞ்சிக்கோ” என  சென்றுவிட்டான்.

பதறிய மனதை  அடக்க வழி தெரியாமல்  மெதுவாக உள்ளேச் சென்றாள்.

அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூளையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருக்க,  மார்த்திக் கூட மயக்கம் தெளிந்து எழுந்து வந்திருந்தார். நிலாவின் கண் யார் இருக்கிறார்கள் என அவசரமாக நோட்டம் விட்டது.

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இருக்க , “அப்போ அப்போ யுகிக்கு தானா  காலையில கனவுக் கூட வந்துச்சே, அப்போ கொலையா? என்னோட யுகிக்கு என்னாச்சி?” என்றவளின் நடை தடுமாற பக்கத்தில்  இருந்த தூணைப் பிடித்துக் கொண்டாள்.

காயம் என்று சொன்னதற்கே இந்த அளவிற்கு உடைந்து போய்விட்டாள், இன்னும் யுகி இருக்கும் நிலையைப் பார்த்தால் என்ன ஆவளோ..?

நடக்க முடியாமல் நடந்து அவர்களின் அருகில் சென்று விட்டாள்.

அவளைப் பார்த்ததும், முதலில் கதறியது கிருஷ்ணமாள் தான் 

“பாருடி யுகியை.. எப்படி கிடைக்கறான்னு பாரு,பாவி பயலுங்க என் பேரனை கொதறிப் போட்டுட்டு போய்ட்டாங்களே.. அவங்க நல்லா இருப்பாங்களா நாசமா போய்டுவாங்க, விளங்காம போய்டுவாங்க” என அழ.. உடல் நடுக்கத்துடன் ஐசியூவை எட்டிப் பார்த்தாள்.

மருத்துவர்கள் யுகி முகத்தை தவிர மற்ற இடங்கள் அனைத்திற்கும் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்ததும் அப்படியே மடங்கி உக்கார்ந்தவள்..

“ஆஆஆஆஆஆஆஆஆ  யுகிஈஈஈ.......”

“நிலா கத்தாத, பக்கத்துல பேஸண்ட்ஸ் இருக்காங்க” என வளவன் அவளை அடக்கப் பார்த்தும்,அவன் கையை தட்டி விட்டவள் 

“எப்படி ஆச்சி  சொல்லுங்க........?”

நடந்ததை வளவனுக்கு தெரிந்ததை சொன்னான். நிலாவால் நிலைக் கொள்ள முடியவில்லை...

“ஆஆஆஆ”  வளவனின் சட்டைப் பிடித்தவள், “எனக்கு யுகி வேணும் என்னோட யுகி வேணும்,அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி நான் இருக்க மாட்டேன்......” கதறி துடிக்கும் நிலாவை சமாதானம் பண்ண முடியாமல் நந்தனைப் பார்க்க, அவனோ அவள் அழுகையைப் பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டான்.

“பொறுமையா இரு அம்மு, உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கோ அதே அளவு கஷ்டம் எங்களுக்கும் இருக்கு, டாக்டர் வரட்டும் அவர் வந்து சொன்னாதான்  தெரியும்.”

“அப்போ நான் உள்ளேப் போய் கேக்கறேன் என்னாச்சுன்னு” என கதவை திறக்க, முயற்சி செய்ய அது உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

“கதவை திறங்க, அவனுக்கு என்னாச்சின்னு சொல்றிங்களா? இல்லையா..? என்னய உள்ள விடுங்க நான் அவனைப் பார்க்கணும்”  என கதவை தட்ட..

“நிலா....வியா....” என அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டனர்.

“என்னைய விடுங்க,  நான் அவனைப் பார்க்கணும், அவன் பூனைன்னு சொல்லாம என் தொண்டையில பச்ச தண்ணி இறங்காது” என கத்த..

அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் நந்தன்.

“ஏய் விடு என்னைய”

“அடிச்சி பல்லை தட்டிட்டுவேன் வாயை மூடுடி” என  மருத்துவமனை தோட்டத்திற்கு இழுத்து வந்துவிட்டான்.

“எங்க அடிப் பார்க்கலாம் ,  எனக்கு அவனைப் பார்க்கணும்”  என நந்தனை தள்ளிவிட்டு ஓடப் பார்த்தவளை இழுத்து கன்னத்திலையே ஓங்கி அறைந்து விட்டான்.

திடிரெண்டு அடி விழுகவும்,கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு மழுங்க மழுங்க விழித்தாள்...

அவள் உதடுகள் மட்டும் யுகி என்று சொல்வதை நிறுத்தவில்லை. வலிக்கிறது வயிற்றுக்கு மேலும் கழுத்துக்கு கீழும் உள்ள அனைத்து பகுதியும் வலிக்கிறது. நெஞ்சுக் கூடே காலியானது போல்  வலி..

அவள் பார்வையில்  இழுத்து அணைத்துக் கொண்டான் நந்தன்.

“முடியலைங்க அவனை இப்படி பார்க்க முடியல, செத்துடலாம் போல இருக்கு” நந்தனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு  அழுதாள்.

“அவன் சீக்கிரம் சரியாகிடுவான், நீ இப்படி அழறதைப் பார்த்தா அவனுக்கு தெம்பு எங்க இருந்து வரும் சொல்லு.?”.

“ம்ம்  என்னால அழாம இருக்க முடியலையே..” என்றவளை அங்கிருந்த கல்லில் அமர வைத்தவன்.

“காபி வாங்கிட்டு வரட்டுமா?” என்றான்.

“வேண்டா”

“கொஞ்சம் குடி அப்போதான் அவன் கண்  முழிக்குது போது  உன்னால பேச முடியும்.”

“வேண்டா...  யுகி யுகி....” என அழுதுக் கொண்டே இருந்தவள், “நீங்க போலீஸ் தானே அவனை இப்படி பண்ணவீங்களை கண்டிப்பிடிச்சி ஜெயிலப் போடுங்க”. என்று சொல்ல நந்தனின் முகம் சற்று இளகியது.

“ஜெயில போட்டா மட்டும் போதுமா?”

“போதும் போதும், நான் இப்போ ஓகே தான் உள்ளே போலாமா?”

“இரு வரேன்” என்றவன்.. கடைக்குப்  போய்  தண்ணீர் பாட்டளையும்  அனைவருக்கும்,குடிக்க காபியும் வாங்கிக் கொண்டு வந்தான்.

“உள்ளே வா”

“ம்ம்”

“எல்லோரையும் குடிக்க வைக்கிறது உன்னோட வேலை..”

“என்னால  முடியாது” என  கண்ணீரைத் துடைக்க.

“நீதான் பண்ணனும்” என்றான் அழுத்தமாக. அவளை திசை திருப்பவில்லை என்றால் இப்போதைக்கு  சரி செய்ய முடியாது  என்று தான் மிரட்டினான். மற்றபடி  அவள் இருக்கும் நிலையில் வேலை ஏவும் அளவிற்கு இன்னும் கொடுமைக்காரன் ஆகவில்லை.

மற்றவர்களை பேசி காபி குடிக்க வைத்து விட்டான்,  இப்படியே உணவையும்  கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்க, என்ன மிரட்டியும் நிலாவிடம் அவன்  அதிகாரம் செல்லுப் படியாகவில்லை.

கிட்ட தட்ட ஆறுமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் யுகியின் அறையில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் வந்ததும் எல்லோரும் அடித்துப் பிடித்து அருகில் ஓட..

நந்தனை  மருத்துவர்களுக்கு முன்பே தெரியும்,என்பதால் அவனிடம் பேசினார்கள்.

"மிஸ்டர் நந்தன்."

"டாக்டர்... "என்றவனுக்கு,அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்று உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட்டது.. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்.. விறைப்பாக நின்றான்.

"எங்களால முடிஞ்ச அளவுக்கு காயத்துக்கு எல்லாம் தையல் போட்டுட்டோம்.நல்லவேளை அவரை  ப்ரொடெக்ட் பண்ணறதுக்கு கீழே உக்கார்ந்து கையை குறுக்க வெச்சதால உயிர்நாடி, முகம், கழுத்துன்னு இதுல பெருசா வெட்டு விழுல."

"ம்ம்"

"ஆனா ரத்தம் நிறைய போயிருக்கு, தலையில ரெண்டு வெட்டு பலமா பட்டுருக்கு, ஸ்கேன் பண்ணிருக்கோம் இப்போதைக்கு மூளை நரம்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா பின்னாடி ரத்தம் உறையறதுக்கு வாய்ப்பு இருக்கு,பிளட் ஏத்திட்டே இருக்கோம் புல் பாடி ஸ்கேன் பண்ண வேண்டியிருக்கும், பண்ணிட்டு என்னனு சொல்றோம். இப்போதைக்கும் உயிருக்கு ஆபத்து இல்லைன்னு உறுதியா சொல்ல முடியாது.48 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்  பார்த்துட்டு தான் சொல்றோம்".

"48 மணி நேரம் வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது  நான் இப்போவே அவனைப் பார்க்கனும்" என நிலா  உள்ளேப் போக முயற்சி செய்ய.

"என்னம்மா பண்றீங்க..?பேஸண்ட் ரூமுக்குள்ள போனா அவங்களுக்கு இன்பெக்க்ஷன்  ஆகிடும்ன்னு தெரியாதா?, அவருக்கு என்ன காய்கறி வெட்டும் போதா காயம் ஆகியிருக்கு . உடம்புல  ஒரு இடம் பாக்கி இல்லாம வெட்டிருக்காங்க. இன்னும் மூனு நாளைக்கு யாரும் அவரைப் பார்க்கக் கூடாது, மீறி பார்க்க ட்ரை பண்ணீங்கன்னா நீங்க வேற ஹாஸ்பிடல் பார்த்துக்கோங்க எங்களால் டிரீட்மென்ட் பார்க்க முடியாது." என்றார் மருத்துவர் உறுதியாக.

"சார் உள்ளேப் போங்காம பார்த்துக்கறேன்". என நந்தன் நிலாவைப்  பிடித்துக் கொண்டவன் "அமைதியா இருடி". என்றான் மெதுவாக.

"முடியாது நாலுநாள் என்னால அவனைப் பார்க்காம இருக்க முடியாது"  என துள்ள..

"அடி வாங்கிடாத வியா.. வளவா, இவளை இழுத்து கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வா"

"நான் எங்கயும் போக மாட்டேன் இப்போ விடறீங்களா இல்லையா?"

"வியா ஆல்ரெடி எல்லோரும்  கவலையில இருக்கோம், அவங்க நிலைமை புரிஞ்சிக்காம நீ  ரொம்ப பண்ணிட்டு இருக்க..உனக்கு மட்டும் தான் அவன் முக்கியமா, இங்க இருக்கவீங்களுக்கு முக்கியமில்லையா?" என நந்தனின் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வந்தது, பார்வை மணியையும் ஷாலினியையும் தொட்டுச் சென்றது. அவர்கள் அழுதவாறு நிலாவை சமாதானம் செய்ய..

நந்தனுக்கு இன்னும் கோவம் அதிகம் வந்துவிட்டது.

"உனக்கு உன்னோட பீலிங் தான் பெருசா?,  பெத்தவீங்களையும் ,  கூட பொறந்த எங்களையும் விட  நீ முக்கியமானவளா..? அவன் இந்த நிலைமையில இருக்கறதுக்கு மொதக் காரணமே நீதான்.கம்முனு பெங்களூருல இருந்தவனை   இப்பவே வா வான்னு இழுத்துக் கொண்டு வந்து இப்படி படுக்க வெச்சிட்டு,இதுல பார்க்க வேற செய்யணுமா?"

"நந்து அவ அவன் மேல இருக்க பாசத்துல தானே அப்படி பண்றா?" என வளவன் நைந்த குரலில் கூற

"யாருக்கு பாசமில்ல எல்லோருக்கும் தான் பாசமிருக்கு. அவங்களா இப்படியா பண்ணிட்டு இருக்காங்க. இவ பண்றதுல வேற ஹாஸ்பிடல் கொண்டு போங்கன்னு சொல்லிட்டா ஒவ்வொரு ஹாஸ்பிடலா ஏறி ஏறி இறங்கிட்டு இருக்க முடியுமா சொல்லு?". என கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையில் அழுதுக் கொண்டிருந்தவர்கள் கூட கப்சிப் என்றாகிவிட..

நிலா ஓரமாக போய் ஒரு நாற்காலியில் உக்கார்ந்து விட்டாள்.

நந்தன் சொன்ன வழியில் நிலா யோசிக்கவே இல்லை. அவள் வர சொன்னதால் தான் இந்த விபத்து நடந்துவிட்டது என  இப்போது  யோசிக்க, உள்ளம் மறுக ஆரம்பித்துவிட்டாள்.

"அவன் எனக்கு சந்தோசத்த மட்டும் தான் கொடுத்தான், ஆனா நான் அவனுக்கு வலியை மட்டும் தான் கொடுத்துருக்கேன் கொடுக்கறேன்,  என்ன ஜென்மம் நான்?"  என உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் வெந்து தணிந்தாள்.

அவளின் அமைதி நந்தனை  கலவரமாக்கியது என்னவோ உண்மை.. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் போதுக் கூட இந்த அளவிற்கு பயப்படவில்லை நந்தன் இப்போது பயந்தான்.

அவளை வேறு குற்றம் சொல்லிருக்கிறான் அதையே நினைத்து மறுகுவாளோ என அவள் அருகில் போக போவ,அதற்குள் வளவன் மணி இருவருமே  ஆளுக்கு ஒருப் பக்கம் அமர்ந்து அவளிடம் பேசத் தொடங்கிவிட அவளை நோக்கி நகர்ந்து கால்கள் அப்படியே நின்று விட்டது.

"அம்மு."

"நிலாம்மா".

யார் எப்படி அழைத்தும் நிலாவிடம் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

"அவன் கோவத்துல சொல்லிடான்டா..அதுக்காக இப்படி இடுஞ்சிப் போய் உக்காருவியா?". என இருவரும் எப்படி எப்படியோ பேசிப் பார்க்க, எந்த அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தாளோ அந்த அளவிற்கு அமைதியாக இருந்தாள்.

இங்கு அனைவரையும் பித்துப் பிடிக்க வைத்து விட்டு யுகிப் பாட்டுக்கு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

அவனது பூனையின் நிலை அறிந்திருந்தால் அவளை காக்கவாது எமனோடு போராடி  மீண்டு வந்திருப்பானோ என்னவோ.



Leave a comment


Comments


Related Post