இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை 101 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 07-08-2024

Total Views: 1522

நிலாவுடன் ஒரே வண்டியில் ஒன்றாக வரும் போது இருந்த ஆனந்ததிற்கு அளவேயில்லை.அதன்பிறகு அந்த வண்டியில் யாரையும் ஏற்ற வேண்டும் என்ற எண்ணமே எழுந்ததில்லை.

ஷாலினி கல்லூரிக்குக் கொண்டு விடச் சொன்னாலும்,  பணம் கொடுத்து ஆட்டோவில் போகச் சொல்லிவிடுவான்,  இல்லையா காரில் அவளை பின் இருக்கையில் அமரச் சொல்லி அழைத்துச் செல்லுவான்.

நிலாவைத் தவிர யாரையும் அடித்ததில்லை,  யாரையும் டி போட்டு உரிமையாக பேசியதில்லை,யாரையும் அவனது வண்டியில் ஏற்றியதில்லை, யாரையும் அழுக வைத்ததில்லை, யாரையும் அவன் கண்கள் சீண்டியதில்லை என நந்தனின் யாரையும் பட்டியல் நீண்டுக் கொண்டேப் போக, அப்போது தான் அவள் மீது உண்டான காதலை உணர்ந்தான்..

அவனின் அனைத்து உரிமைக்கும் சொந்தக்காரி அவனது ‘குட்டி மட்டும் தான். அவள் இன்றி அவன் இல்லை இதைப் புரிந்துக் கொள்ள இருபத்தி இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. காதல் ஒன்று தானே ஜாதி மதம் பாகுபாடுகளை கடந்தும் தோன்றும்.

ஆனால் புரியும் போது நிலா அவன் அருகில் இல்லையே. வேண்டும் அவள் மட்டும் தான் வேண்டும் என அவளுக்காக காத்திருந்தான்.

பிரிவு தான் காதலை கற்றுக் கொடுக்கும், யுகி நந்தனிடம் பேசாமல் போனப் பிறகு, எதற்காகவும் நந்தனை யாரிடமும் மாட்டி விட்டதே இல்லை நிலா.

நிலாவின் குடும்பம் பெங்களூரு போயிருந்த சமயம் நிலாவின் பிரிவில் யுகி வாடி வதங்கி கிடந்தான். அவனாவது நிலாவையும்,வளவனையும் தன் உயிரா நினைத்தான், வாடினான்.

இதில் நந்தனின் மனநிலையும் மாறி, வாடி வதங்கியது தான் ஆச்சரியம்..

விடலை பருவம் முடிந்து வாலிப வயதை எட்டியிருந்தான்

தொழிலைக் கட்டுக் கொள்ள நினைத்துதான் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்தான்.

தொழிலையும் கற்றுக் கொண்டிருந்த சமயம்.

மணிமேகலையின் கூடப் பிறந்த தம்பி சங்கரப் பாண்டியன் ,  மணிக்கு திருமணம் முடியும் போது  நான்கு வயது பையனாக இருந்தான்.

நந்தன் படிக்கும் போது சங்கர் எம்எல்ஏ வாக இருந்தான். இப்போது அரசியலில் சட்டத்துறை அமைச்சராக இருக்கிறான் .

குடும்ப சண்டையில்  நந்தன் குடும்பத்துடன் பெரிதாக  உறவு இருக்கவில்லை.

இவர் தான் என்னுடைய மாமா என்றோ, மைத்துனன் என்றோ நந்தனும் மார்த்தியும் எங்கும் சொல்லிக் கொண்டதில்லை.

ஆனால் நந்தனிற்கு சங்கர் என்றாலே தனி மரியாதை இருந்தது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவர்களிடம் பேசுவதை மட்டும் நந்தன் நிறுத்தவும் இல்லை வருடம் ஒரு தடவை தன் தாயின் பிறந்த வீட்டிற்கு செல்வதையும் நிறுத்தவில்லை.

நந்தன் தொழிலைக் கற்றுக்கொள்ளும் போது சங்கருக்கு 27 வயதாகியது,அப்போ திருமணம் என பெயர் எடுத்தாலே இருவருக்கும் இடையே சண்டை தான் வரும், சங்கருக்கு திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் போனதால் வேண்டாம் என மறுத்துக்கொண்டே வந்தான்.

“நந்து உனக்கு தொழில் வேண்டா.. என்னுடைய அரசியல் வாரிசா வந்துடு” என நந்தனையும் உள்ளே இழுக்கப் பார்க்க.

“இல்ல மாமா எனக்கு பிஸ்னஸ் தான் செட் ஆகும்.,”என்று மறுத்துவிட்டான் நந்தன்.

“எனக்குப் அப்பறம் அரசியலுக்கு வர யாருடா கண்ணு இருக்கா?”.

“கல்யாணம் பண்ணிக்கோ, உன் பையன் வந்து அரசியலைப் பார்த்துப்பான்.”

“நான் என்ன சொல்றேன்? நீ என்ன சொல்ற?. எனக்கு அதுலையிலா சுத்தமா விருப்பமில்ல”.

“நீ இப்படியே இருந்தின்னா உன்னைய நினைச்சி அம்மா அங்க கவலைப்பட்டுட்டு இருக்கும்”

“அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுடா.”.

“ அப்போ எனக்கும் அரசியல் வரதில்லைலா விருப்பமில்லை மாமா, விட்டுடு” என்று விட்டான்.

வாழ்க்கை நினைத்ததை எல்லாம் கொடுக்கும் என்று சொல்ல முடியாதே ஒருநாள் சங்கரை எதிர்கட்சிக்காரன் ஆள் வைத்து தாக்கிவிட்டனர்..

அன்று அவன் நந்தனிடம் திரும்ப அதையே தான் சொன்னான் . “நந்து எனக்கு பின்னாடி இந்த அரசியலுக்கு வர ஆள் இல்லாமலே போய்டும் தம்பி எனக்காக வா” என்றான் 

“எனக்கு இதுலைலா விருப்பம் இல்லை மாமா..”

“சரி அப்போ போலீஸ் ஆகிடு”.என ஏதோ ஒரு எண்ணத்தில் சங்கர் சொல்ல.

“எதுக்கு?”என்றான்.

“பிஸ்னஸ்மேன் ஆகறதுக்கு போலீஸ் ஆகலாம்ல யார்கிட்டையும் கைக் கட்டி நிற்கணும்னு அவசியமில்லை உனக்கு நீதான் ராஜா” என நந்தனின் மூளையை கழுவினான்.

சங்கருக்கு எப்படியோ நந்தனை தொழிலதிபர் ஆகாமல் தடுக்க வேண்டும்  என்பது தான் குறிக்கோள்.

தன் ஜாதி, மதம் தான் பெரிது என்று இருப்பவன் தொழிலதிபர் ஆனால் அந்த செருக்கு இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. தன் ஜாதி பெரிதல்ல, என அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் அதற்கு ஒன்று அவன் அரசியலில் இருக்க வேண்டும் இல்லையென்றால்  காவல்துறையில் இருக்க வேண்டும் இங்கு தான் ஜாதிகள் அதிகம் புலங்கும்  இடமாக சங்கர் கருதினான் அதற்காகவே நந்தனை இதுக்குள் இழுக்க முயற்சி செய்தான்.

அவன் அரசியலுக்கு வர மாட்டேன் என முடிவாக சொல்லிவிட அதற்கு அடுத்தக்கட்டத்தில் இருப்பது காவல்துறை தான். அதனால் தான் போலீஸ் ஆகி விடச் சொன்னேன்.

விவரம் தெரிய ஆரம்பித்த நாளில் இருந்து  தொழில்  தொழில் என ஆசையாக இருந்து விட்டான் இப்போது போலீஸ் என மனதை மாற்ற சற்று கஷ்டமாக இருந்தது  “யோசிச்சி சொல்றேன் மாமா” என்றான்.

“யோசிக்க என்ன இருக்கு மாப்பிள்ளை?. போலீஸா இருந்துட்டுக் கூட உன்னோட பிஸ்னசை நீ பார்த்துக்கலாம்ல. இப்போ யுகி.மாமா ரெண்டுபேரும் பிஸ்னஸ்ல இருக்கும் போது நீ போலீஸ் ஆனா கெத்தா இருக்கும்ல., எனக்கும் நீ துணையா இருக்கலாம்  உனக்கு நான் துணையா இருப்பேன்”  என எதை எதையோ பேசி மூளை சலவை செய்தார்.

அன்று முழுவதும் பயங்கரமாக யோசித்தவன்,  “ஏன் போலீஸ் ஆனாலும் நல்லா தான் இருப்பேன். எனக்கு இருக்கற கெத்துக்கு சூப்பரா இருக்கும்,எந்த விதத்திலும் குறைஞ்சுப்போக மாட்டேன்ல” என்று எண்ணிக்கொண்டான், அதற்காக உடனே அதை செயல் படுத்தவில்லை ஆறுமாசம் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோமா என தன்னை தானே பரிசோதித்துக் கொண்டு தான், காவல் படிக்க ஆரம்பித்தான்.

அந்த சமயம் அவன் மனம் நிலாவைத் தேடியது.அவள் அருகில் வேண்டும் தன்  கவலைகளை அவள் மடி சாய்ந்துகொண்டே அவளிடம் கூற வேண்டும், தலைக் கோத அவள் விரல்கள் வேண்டும் என மனம் துடித்தது என்னவோ உண்மை.

வாரத்தில் ஒருமுறை பெங்களூரு சென்று அவள் அறியாமலே பார்த்துவிட்டு வருவான்.. 

காலம் வேகமாகச் செல்ல. போலீஸ் ஆகி வந்தவனுக்கு நிறைய சோதனைகள் காத்திருந்தது.

எடுத்ததும் திருப்பூரில் போஸ்டிங் கிடைப்பது போல் சங்கர் பார்த்துக்கொண்டான்.

நந்தனிடம் வரும் கேஸ் அனைத்தும் ஜாதி வெறியில் வெட்டிகிட்டாங்க,  குத்திட்டாங்க, கொன்னுட்டாங்க, என்பதாக தான் இருந்தது.

முதலில் உயர் ஜாதிக்காரனிற்கும், அவன் ஜாதியைச் சேர்ந்தவனுக்கும் ஆதரவுக் கொடுத்து அவர்களுக்கு சார்பாகப் பேசினான் நந்தன்..

எப்போதும் ஒருப் பக்கத்தினரை மட்டும் பார்த்து பழகியவனுக்கு, இன்னொரு பக்கமும் பார்க்க வேண்டும் அவர்களுக்கும் அழுகை, வலி, சிரிப்பு,  வேதனை, இதெல்லாம் இருக்கும் என இந்த நாட்கள் தான் கற்றுக் கொடுத்தது..

உயர் ஜாதிகாரனின் காரை, தாழ்த்தப்பட்ட பிரிவி சேர்ந்தக் குழந்தை பள்ளி போகும் போது லேசாக உரசி சென்றது என்ற ஒரேக் காரணத்திற்காக, குழந்தை என்றும் பார்க்காமல் கையை வெட்டிருந்தனர்.

அந்த கேஸ் நந்தனிடம் தான் வந்தது.

தன் ஜாதிக்காரப் பையன் தனக்கு ஆதரவாக தான் பேசுவான் என மமதையில்  கார்காரன் இருக்க. அந்த குழந்தையின் பெற்றோர் நியாயம் கேட்டு குழந்தையை காவல் நிலையத்திற்கே எடுத்து வந்து போராடினர்.

“என்னமா பண்ணறீங்க முதல்ல ஹாஸ்பிடல் போங்க.”

“போக மாட்டோம் சார், என் குழந்தைக்கு நியாயம் கிடைக்கணும், இல்லனா இங்கையே சாகட்டும், அங்கப் போற உசுரு எங்கப் போனா என்ன?”

“அவங்க வெட்டி தப்பு பண்ணதை விட, நீங்க டிரீட்மென்ட் பண்ணாம அந்தக் குழந்தைக்குப் பெரிய தப்பு பண்றீங்க,  முதல்ல தூக்கிட்டுப் போய் பாருங்க.”

“நாங்க போகணும்ன்னா நீங்க அவங்க மேல ஆக்சன் எடுக்கறேன்னு சொல்லுங்க, அப்போதான் போவோம்”.

குழந்தை வலியில் கதற கதற . நந்தனின் இரும்பு இதயத்தில் ரத்தம் வடிந்தது.

“கண்டிப்பா பண்றேன் நீங்க முதல்ல குழந்தையை தூக்கிட்டுப் போய்ட்டு வாங்க ப்ளீஸ்”  என்று கெஞ்சினான்.

அவன் பேச்சை நம்பி குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை ஓடினார்கள்.

அவர்கள் போனதும் தான் இழுத்து வைத்த மூச்சை விட்டான்.

நந்தனும் அவனுடைய ஷூவைப் போட்டதற்காக, நிலாவின் மண்டையை உடைத்து அந்த தவறை செய்திருக்கிறான் தானே. அந்த குழந்தையைப் பார்க்கும் போது நிலாவின் நினைவு தான் வந்தது.

எந்த ஜாதியாக இருந்தாலும் ரத்தம் என்னவோ சிவப்பு தானே. உயர் ஜாதிக்காரன் ஆபத்தில் ரத்தம் ஏற்றும் போது அது எந்த ஜாதிக்காரன் உடையது என்று பார்த்தா செலுத்திக் கொள்கிறார்கள்.. எல்லோரும் ஒன்று தான் என நந்தனின் மண்டையில் உறைக்க அடித்து கற்றுக் கொடுத்த நேரம் அது.

அங்கு அவன் கற்கும் பாடம் இவ்வளவு நாள் மனதில் இருந்த அழுக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்தது.

அவர்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டதால் கார்காரனைத் தூக்கி உள்ளேப்  போட்டு அடி வெளுத்து வாங்கிவிட்டான்.

அந்த இடத்தில் தான் அவன் ஜாதிப் பெருமை அடிவாங்கி தோற்றது. நந்தன் மனிதனாக  கண்ட முதல் வெற்றி

அடுத்த ஒரு வாரத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தையை உயர் பிரிவை சேர்ந்தவன் நாயை விட்டு கடிக்க வைத்திருந்தான்,

இதெல்லாம் செய்தியிலோ, பேப்பரிலோ பார்க்கும் போது எங்கோ நடக்கிறது என எளிதாக கடக்க முடிந்தவனால், தன் கண்ணுக்கு முன் நடப்பதை  அவ்வாறு எளிதாக கடக்க முடியவில்லை.

“குழந்தைகள் என்னடா பாவம் பண்ணுச்சி? உங்க ஜாதி வெறிக்கு அதை ஏண்டா ரணப்படுத்துறீங்க..?மனுசங்களா நீங்க..? இப்படி ஜாதிவெறி புடிச்சி திரியுற உங்கள மாதிரி ஆளுங்களைப் பார்க்கும் போது தான்டா, ஏண்டா இந்த ஜாதியில பொறந்தோம்னு வெட்கப்படத் தோணுது”  என கத்தினான். எந்த சின்ன குழந்தை வந்தாலும் அவனுக்கு அவர்கள் நிலாவாக தான் தெரிந்தனர்.

இரண்டு நாளில் தாழ்த்தப்பட்ட பையன் பன்னிரெண்டாம் வகுப்பில் உயர் ஜாதிக்கார பசங்களை விட,அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள்,அதில் அவனது தங்கைக்கும் வெட்டு விழுந்திருந்தது.இதைப் பார்த்த பெரியவர் ஒருவர் நெஞ்சு வலி வந்து சம்பவ இடத்தில்லையே இறந்துவிட்டார்.

இந்த கேஸும் நந்தனிடம் தான் வந்தது.

அவனுக்கே சந்தேகம். ஒரு பள்ளியில் ஜாதியை வைத்து இவ்வளவு அரசியல் செய்கிறார்கள் என்றால் நாடு முழுவதும் எந்த அளவிற்கு அரசியல் நடக்க வேண்டும்.

குழந்தைகள் மனதில் ஏற்ற தாழ்வை விதைத்த சமூகத்தை  என்னவென்று சொல்வது என நொந்துக் கொள்ள அவன் மனமே அவனை எள்ளி நகையாடியது.

“நீ எப்படி இருந்த?, எப்படி வளந்த? உன்னய மாதிரி தானே இருப்பாங்க. நீயும் பிஸ்னஸ்மேனா ஆகியிருந்தா ஊர் உலகத்துல  இப்படி நடக்குதுங்கறதே தெரியாம போய் நீயும் அப்படியே தானே இருந்துருப்ப” என்றது.

அது என்னவோ உண்மை தானே.

இப்படிப் பட்ட கேசாக பார்த்து பார்த்து அவனிடம் வரக் காரணம் என்ன?,என்று சிறிது யோசித்திருந்தால் அதற்கு விடை கிடைத்திருக்கும் ஆமாம் நந்தனின் மாமா சங்கர் தான் இது மாதிரியான கேஸை மட்டும் அவனுக்கு போகும் படிப் பார்த்துக் கொண்டான்.

அவன் மனதில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்டு வர வேண்டும். சிறு வயதில் கற்காத

தீண்டாமை ஒரு பாவச்செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்...

என்றப் பாடத்தை தினம் தினம் கற்றுக் கொடுக்க வைத்தான் சங்கரப்பாண்டியன்.



Leave a comment


Comments


Related Post