Total Views: 1267
அவர்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டதால் கார்காரனைத் தூக்கி உள்ளேப் போட்டு அடி வெளுத்து வாங்கிவிட்டான்.
அந்த இடத்தில் தான் அவன் ஜாதிப் பெருமை அடிவாங்கி தோற்றது. நந்தன் மனிதனாக கண்ட முதல் வெற்றி
அடுத்த ஒரு வாரத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தையை உயர் பிரிவை சேர்ந்தவன் நாயை விட்டு கடிக்க வைத்திருந்தான்,
இதெல்லாம் செய்தியிலோ, பேப்பரிலோ பார்க்கும் போது எங்கோ நடக்கிறது என எளிதாக கடக்க முடிந்தவனால், தன் கண்ணுக்கு முன் நடப்பதை அவ்வாறு எளிதாக கடக்க முடியவில்லை.
“குழந்தைகள் என்னடா பாவம் பண்ணுச்சி? உங்க ஜாதி வெறிக்கு அதை ஏண்டா ரணப்படுத்துறீங்க..?மனுசங்களா நீங்க..? இப்படி ஜாதிவெறி புடிச்சி திரியுற உங்கள மாதிரி ஆளுங்களைப் பார்க்கும் போது தான்டா, ஏண்டா இந்த ஜாதியில பொறந்தோம்னு வெட்கப்படத் தோணுது” என கத்தினான். எந்த சின்ன குழந்தை வந்தாலும் அவனுக்கு அவர்கள் நிலாவாக தான் தெரிந்தனர்.
இரண்டு நாளில் தாழ்த்தப்பட்ட பையன் பன்னிரெண்டாம் வகுப்பில் உயர் ஜாதிக்கார பசங்களை விட,அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள்,அதில் அவனது தங்கைக்கும் வெட்டு விழுந்திருந்தது.இதைப் பார்த்த பெரியவர் ஒருவர் நெஞ்சு வலி வந்து சம்பவ இடத்தில்லையே இறந்துவிட்டார்.
இந்த கேஸும் நந்தனிடம் தான் வந்தது.
அவனுக்கே சந்தேகம். ஒரு பள்ளியில் ஜாதியை வைத்து இவ்வளவு அரசியல் செய்கிறார்கள் என்றால் நாடு முழுவதும் எந்த அளவிற்கு அரசியல் நடக்க வேண்டும்.
குழந்தைகள் மனதில் ஏற்ற தாழ்வை விதைத்த சமூகத்தை என்னவென்று சொல்வது என நொந்துக் கொள்ள அவன் மனமே அவனை எள்ளி நகையாடியது.
“நீ எப்படி இருந்த?, எப்படி வளந்த? உன்னய மாதிரி தானே இருப்பாங்க. நீயும் பிஸ்னஸ்மேனா ஆகியிருந்தா ஊர் உலகத்துல இப்படி நடக்குதுங்கறதே தெரியாம போய் நீயும் அப்படியே தானே இருந்துருப்ப” என்றது.
அது என்னவோ உண்மை தானே.
இப்படிப் பட்ட கேசாக பார்த்து பார்த்து அவனிடம் வரக் காரணம் என்ன?,என்று சிறிது யோசித்திருந்தால் அதற்கு விடை கிடைத்திருக்கும் ஆமாம் நந்தனின் மாமா சங்கர் தான் இது மாதிரியான கேஸை மட்டும் அவனுக்கு போகும் படிப் பார்த்துக் கொண்டான்.
அவன் மனதில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்டு வர வேண்டும். சிறு வயதில் கற்காத
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்...
என்றப் பாடத்தை தினம் தினம் கற்றுக் கொடுக்க வைத்தான் சங்கரப்பாண்டியன்.
25 வருடம் கற்காததை இரண்டு வருடத்தில் கற்றுக் கொடுத்துவிட்டான் சங்கரப் பாண்டியன் .
அதனால் தான் வளவன், ஷாலினி திருமணத்தைக் கூட எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது நந்தனால்.
நந்தனிற்கு அசிஸ்டண்ட் கமிஷ்னராக பதவி உயர்வு கிடைக்க செய்தான் சங்கர்.
இது உறவு முறையால் வந்த பதவி கிடையாது உழைப்பின் ஊதியமாக கிடைத்த பதவி.
அதே சமயம் சங்கரப் பாண்டியனும் எம்எல்ஏ வில் இருந்து சட்டத்துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றான்.
அதன்பிறகு நந்தனிற்கு ஜாதி சம்மந்தப்பட்ட கேஸ்கள் வரவில்லை, அதற்கு பதிலாக பெரிய பெரிய இடங்களை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் செயல்கள் தான் வந்தன. அப்படி வந்தது தான் சூர்யராஜின் கேசும்
பல சட்டப்புறம்பான வேலைகளை செய்து வைத்திருந்தனர் அப்பனும் பையனும். அதில்லாமல் அந்த விஷயம் தெரிந்த 4 பேரையும் கொலை செய்திருந்தனர்.அதை விசாரிக்க பெங்களூரு போக கிளம்பிக் கொண்டிருக்கும் போது தான் யுகி எழுதிய ஐ லவ் யூ நிலா என்ற நோட் நந்தனுக்கு கிடைத்தது.
யுகிக்காக அம்மாவை விட்டுக் கொடுக்கலாம் ஆனால் நிலாவை விட்டுக் கொடுக்க முடியாது, “அவனுக்கு தான் அம்மாவும் ஷாலினியையும் விட்டுக் கொடுத்துட்டேன்ல.. இவளையும் குடுக்கணுமா முடியாது. எனக்கு என் வியா வேணும்”.என்றவன்
அப்போதே முடிவு செய்து விட்டான் பெண் பார்க்க வருபவளை கல்யாணம் செய்து தான் அனுப்ப வேண்டும் என்று.
பெங்களூரு போனவனுக்கு நிலாவின் தரிசனம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.. அதும் அவளை வீராங்கனையாக கண்டதில் இன்னும் மகிழ்ச்சியின் அளவு கூடியது.
அவன் நினைத்திருந்தால் நிலாவை இந்த விஷயத்தில் நுழையவே விட்டிருக்க மாட்டான். கல்யாணம் செய்துக் கொள்ள இதுவும் ஒரு துருப்பு சீட்டாக இருக்கும் என்று தான் நிலா செய்யும் அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தான்.
எதிரியாக நினைத்தப் போது எளிதில் அவளை நெருங்க முடிந்தது. காதலியாக அவன் மனதில் மஞ்சம் கொண்டப் பிறகு அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை.
ஊருக்கு வந்தப் பின்பு.அவளை மிக அருகில் பார்த்ததும் எங்கு கண்கள் காதலைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என பயந்து தான் கண்ணாடியை போட்டிருந்தான்.
இரவு அவளை மொட்டை மாடியில் பார்க்கும் போது அவனைப் பார்த்து இன்னும் பயந்து நடுங்க..ஒரு காலத்தில் அந்த நடுக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தது என்னவோ உண்மை தான், ஆனால் ,அதுதானே இப்போது அவளை தன்னிடம் நெருங்க விடாமல் செய்கிறது என்று வேதனையாகவும் இருந்தது.அவளை நெருங்க வைக்க நேரம் பார்த்துக் கொண்டியிருக்க.
அடுத்த இரண்டு நாளும் நிலா யுகியுடன் சேர்ந்து ஊரை சுற்றியது தெரிந்ததும்.. மனம் அடித்துக் கொண்டது
அவன் விரும்புவது போல இவளும் அவனை விரும்பி விட்டால் என்ன செய்வது?. அவளின் விருப்பத்தை மீறி அவளைக் கைப்பிடிக்க முடியுமா? அப்படிக் கைப் பிடித்தால் அவளுடைய முழு அன்பும் தனக்கு கிடைக்குமா?, என பலக் குழப்பம் தோன்ற, அவள் மனதில் என்ன இருக்கிறது என சீக்கிரம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்
அவள் மனதில் மட்டும் யுகி இல்லை என்றால் போதும். அதன்பிறகு அவளை தன்வசம் கொண்டு வருவது சுலபம். முடியவில்லை என்றாலும் அரட்டி மிரட்டிக் கொண்டு வந்துவிடலாம் பிறகு அவன் மீது காதல் வந்தால் போதும்.என்றுதான் முதலில் தோன்றியது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய நினைத்தான்.
நிலா இன்டெர்வியூ போன இடத்தில் வண்டியை அவன் மீது கொண்டு வந்து விட..அவளைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நந்தனால்.
அதையும் தாண்டி அவளை அவன் அருகில் வைத்துக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு என நினைத்தவன், உடனே இருந்த வேலை அனைத்தையும் மாற்றிக் கொண்டு அன்று முழுவதும் அவளுடன் சுற்றினான்.
அப்போது தான் நந்தன் பல விசயத்தைப் புரிந்துக் கொண்டான்.
சிறிய வயது நிலா எப்படி அவன் கண் பார்வைக்கு கட்டுப்பட்டு ஆடினாளோ அதேப்போல வயது பெண்ணாக மாறியும் அவன் கண் பார்வைக்கு கட்டுப்பட்டு, அவன் விருப்ப வெறுப்புகளை அறிந்து அவன் சொல்வதற்கு முன் செய்தாள்.
அவன் அவளது கையைப் பிடிக்கும் போது அவளுள் எழுந்த தடுமாற்றத்தை நந்தனின் விழிகள் குறித்துக் கொண்டது.
அவள் தடுமாற்றம் சொன்னது இன்னும் அவள் மனதை யாரும் ஆட்கொள்ளவில்லை என்று
அந்த தைரியத்தில் தான் அன்று இரவு வீட்டில் இறக்கி விடும் போது தூக்கக் கலத்தில் இருந்தவளின் இதழைத் தீண்டினான்.
எவ்வளவு அழகான தேன் சிந்தும் தருணம் அது, அதை இப்போது நினைக்கும் போது மனைவியின் இதழ் வேண்டும் என்றது உடல்.
அவனுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் உறங்கிக் கொண்டிருந்தவளை தூக்கி அர்த்தநாரீஸ்வர் போல் தனக்குள் புதைத்து உடலில் பாதியையும் உயிரில் மீதியை பங்கிட்டிருப்பான்.
இப்போதும் கலந்திருக்கும் அவளது முடியை ஒதுக்கி அவள் நெற்றியில் இதழால் உறவாட வேண்டும்.
விஜய் என அவன் தலையை முடியை அவள் கலைத்து விளையாட வேண்டும். வாங்க,போங்க என மரியாதை எல்லாம் யாருக்கு வேண்டும்?,அவள் உரிமையாக வாடா போடா என அழைத்து மீசையை திருகிச் செல்லம் கொஞ்சம் வேண்டும் போல் ஆசை அளவில்லாமல் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.
செவிலியர் வந்து யுகிக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்துவிட்டு இன்று காலை பத்து மணிக்கு டாக்டர் வந்ததும் போலாம் என்று சொல்ல நந்தன் தலையசைத்தான்.
அவர் போனதும் மீண்டும் சோபாவில் படுத்து தன் மனைவியை ரசிக்கத் தொடங்கிவிட்டான்.
அன்று கொடுத்த முதல் முத்தம் நிலாவிற்கு வேண்டுமென்றால் நினைவு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நந்தனின் நெஞ்சுக் குழியில் தித்திக்கும் நினைவாய் அழகாய் வீற்றியிருந்தது.
இதற்கு மேல் அவனால் அவள் இல்லாம இருக்க முடியாது என உடலும், உள்ளமும் பதற, அடுத்த நாள் அனைவரும் உடை எடுக்கப் போன நேரத்தில் துரிதமாக ஒரு திட்டத்தைப் போட்டுக் கொண்டு நிலாவின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவளோ அவன் எள் என்று சொல்லும் முன் எண்ணெயாக நிற்க, அவள் செய்யும் சேட்டையை ரசித்துக் கொண்டே நிலாவை சீண்டிக் கொண்டிருந்தான் நந்தன்.
நிலா ஐஸ்கிரீம் வாங்கப் போயிருந்தப் போது, துணி எடுக்கப் போனவர்கள் கிளம்பிவிட்டார்கள் என ரகசியச் செய்தி வர, அவர்கள் வந்துவிடுவார்கள் என்று தான் மேலாடையைக் கழட்டிவிட்டு தலைக்கு எண்ணெய் வைக்க சொன்னது.
அவளை தப்பாக காட்ட வேண்டும் என்ற எண்ணமில்லை. இதை வைத்து தன்னவளை கரம் பிடித்து விடலாம் என்ற நப்பாசை, அது பலிக்காது என்று தெரியும் போகும்வரை போகட்டும் என்று தான் அப்படி சொன்னது.
அதை யாருமே நம்பவில்லை என்பது வேற கதை.
தன்னுடன் கல்யாணம் என்றதும் நிலாவிற்கு காய்ச்சல் ஏற்பட, நந்தனின் காதல் அங்கு தான் அடி வாங்கியது.
எந்த அளவிற்கு தன் மீது பயம் இருந்தால் கல்யாணம் என்றதுக்கே காய்ச்சல் வந்திருக்கும் என நினைத்து மறுகினான், ஆனால் அவளை விட்டுக் கொடுக்க எந்த இடத்திலும் முன் வரவில்லை.
அவள் வேண்டும், அதற்காக எந்த அளவிற்கு இறங்கி அடிக்கவும் அவன் தயங்கவில்லை.
எல்லோரும் தன்னை விட்டு விலகும் போது, ‘போனா போய்க்கோ எனக்கு எந்த நஷ்டமும் இல்ல’ என திமிராக இருந்தவன் தான்.
நிலாவின் விலகளையும் அப்படி கடந்து போக முயன்று தோற்று விட்டான்,
ஆம் நந்தன் நிலாவிடம் தோற்றுவிட்டான் தான், அவளை மறக்க முடியாமல் அவள் விலகளை தாங்க முடியாமல், தோற்று விட்டான்.
ஒவ்வொரு நிமிடம் வியா,வியா என ஆர்ப்பரிக்கும் அணுக்களை அடக்க வழி தெரியாமல் தோற்றுவிட்டான், அவளை அடைய எந்த எல்லைக்கும் போய் ஜெயிக்க வேண்டும், அவள் காதலை ஜெயிக்க வேண்டும். அவளிடம் தோற்று வாழ்வில் ஜெயிக்கப் பேராசைக் கொண்டது உள்ளம்.
அதற்காக தான் போராடினான்.
என்ன சொன்னால் தன்னை திருமணம் செய்துக் கொள்ள நிலா சம்மதிப்பாள் என அறிந்தவனுக்கு அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
யுகி வளவன் என்று பெயரை வைத்து மட்டும் மிரட்டினாலே போதும், மீன் சரியாக தூண்டிலில் சிக்கிவிடும் என காவல்காரனுக்கு சொல்லியா தர வேண்டும்?.
யுகி,வளவனை கொன்று விடுவேன் என்று மிரட்டியது, அடுத்தவர்களுக்கு முன்பு அவள் இதழ் கவ்வியது, என அனைத்துமே அவளை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் செய்தது தான்.
மிரட்டியதோடு சரி, ஒருநாளும் மிரட்டிதை அப்படியேச் செய்ய வேண்டும் என்று எண்ணியதில்லை நந்தன்.
பார்க்க வெளியே முரடாக இருந்தாலும்,அவனும் பாசத்துக்கு ஏங்கும் குழந்தை தான். தாயின் மடி சாய வேண்டும்,தம்பியை அடித்து சீண்டி சந்தோசமாக இருக்க வேண்டும், தங்கையின் முடியைப் பிடித்து இழுத்து அவளிடம் வம்பிழுக்க வேண்டும் என்ற சராசரி ஆசைகள் அனைத்தும் உண்டு.அவனும் மனிதன் தானே.
நீங்க கொடுக்காத பாசத்தை, நான் வேண்டாம்னு சொன்ன பாசத்தை,என்னவளிடம் நிறைய நிறைய வாங்கிக் கொள்கிறேன் என்று தான் நிலாவை அனைத்திற்கும் தேடினான்.
அன்று ரெஸ்ட்ராண்ட்டில் வைத்து நிலாவைப் போட ஆட்கள் வந்தப் போது அது தனக்கு வந்தவர்கள் என்று நந்தன் யோசிக்கவே இல்லை. அவள் காதை உரசிச் சென்று விட்டான் என்றக் கோவமே கட்டுக்கடங்காமல் இருக்க, உரசி சென்றவனின் காதை வாங்கியவன், அவள் உயிரை எடுக்க துணிந்தவனின் உயிரை எடுக்க மாட்டானா? அவன் உலகமே நிலாதானே. அந்த நிலாவை இழந்து ஒளியற்ற மேகமாய் இருந்து என்ன பயன்.
தன் மீதுக் கொண்ட பயத்தை முதலில் போக்கினால் தான் நிலா தன்னை நெருங்குவாள் என்பதால் இரண்டு வார இரவை அவளுடன் கழித்தான்
இரவு முழுவதும் அவள் மடியில் தான் கிடப்பான். அதை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்து அடங்கியது.
ரோகன் கேஸிற்காக தான் நிலாவை திருமணம் செய்துக் கொள்கிறேன் என மற்றவர்களிடம் சொன்னாலும் அவளை அதற்கு பயன்படுத்த நினைத்ததில்லை. அவளும் அதில் ஒரு அங்கமாக இருந்ததால்,அவளை சுற்றிப் பாதுகாப்பு வளையங்களை மட்டும் பலப்படுத்தி தன் கைக்குள்ளயே வைத்திருந்தான்.
திருமணமும் நல்லப்படியாக முடிந்தது, ரோகன் சூர்யராஜை நந்தன் விருப்பப்படி மேலே அனுப்பி வைத்துவிட்டான். என்ன ஒன்று?
அவனே எதிர்பார்க்காது யுகியின் மீது நடந்த தாக்குதல் தான்.
அன்று அவனை அத்தனை வெட்டுகளுடன் பார்த்தப் போது இரும்பு மனிதன் கூட இளகி தான் போனான். அந்த நிமிடம் திரு மட்டும் உடன் இருக்க வில்லை என்றால் கண்டிப்பாக அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கலங்கி நின்றிருப்பான் நந்தன்.