Total Views: 1520
செல்வராணிக்கு தகவல் சென்றது அடித்துப் பிடித்து தன் கணவனுடன் வந்து சேர்ந்தவர்,
"நந்து எந்த தண்டனையா இருந்தாலும்.வீட்டுல வெச்சி குடுப்பா இப்படி நாலுப் பேருக்கு தெரிய அரெஸ்ட் பண்ணனுனா என் புள்ளையோட பியுச்சர் பாதிக்கும்ல. இனி அவ என்னப் பண்ணுவா" என கதறினார்.
அவரைத் தவிர யாருமே கவிக்கு சார்பாக பேசவில்லை.
"அவ உயிரையே போராடி கொண்டு வந்துருக்கேன், நீங்க இவ பியுச்சர் ஸ்பாயில் ஆய்டும்ன்னு பேசிட்டு இருக்கீங்க. அந்த எண்ணம் இருந்திருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டா". என்றவன் மகளிர் போலீசை வைத்து கைதி செய்து ஜீப்பில் ஏற்றிவிட்டான்.
இன்னும் அவன் கோவம் அடங்கவில்லை. யாருக்கும் இறங்கிப் போய் பழக்கம் இல்லாதவன், இன்று தம்பியின் வாழ்க்கையை நினைத்து தான் கவியை உயிரோடவே விட்டு வைத்திருக்கிறான். இன்னும் சரஸ்வதி பாக்கி இருக்கிறாள். அவளுக்கு நந்தன் கொடுக்கும் அடி மரண அடியாக தான் இருக்கும்.
ஒருமுறை நிலாவை தவறாக பேசியதற்கே மன்னித்து வெறும் இடம் மாற்றத்துடன் விட்டுவிட்டான் இந்த முறையும் அதே தவறைச் செய்ய அவன் என்ன முட்டாளா?.
விட மாட்டான் , அவனவளை படுக்கையில் தள்ளிய ஒருவரையும் ஈவு இறக்கம் பார்க்காமல் அடிப்பான். அதை தாங்கும் சக்தி தான் அவர்களுக்கு வேண்டும்.
கவி ஜீப்பில் ஏறியப் போதும் யுகி திரும்பிக் கூடப் பார்க்காமல் இருக்க, முற்றிலுமாக உடைந்துப் போனாள் கவி.
செல்வராணியும் கிருஷ்ணனம்மாளும் நந்தனின் காலில் விழக் கூடப் போனார்கள். அவர்களை விட்டு விலகி நின்றுக் கொண்டவன். "தப்பு செஞ்சா தண்டனையை அனுபவிச்சு தான் ஆகணும். ஜெயிலுக்குப் போனாவது தண்டனை கம்மியா இருக்கும், என் கையில சிக்குனா திரும்ப வர முடியாத மாதிரி பண்ணிடுவேன், எது நல்லதுன்னு யோசிச்சிக்கோங்க" என பல்லைக் கடிக்க.
"அவன்கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்கீங்க. விடுங்க நான் என் பொண்ணை ஜாமீன்ல எடுத்துக்கறேன்" என்றார் கவியின் தந்தை.
"முடிஞ்சா எடுத்துப் பாருங்க" என்றவன் உள்ளேச் சென்று விட்டான்
இதோ கவியின் மீது எப்ஐஆர் போட்டு ஒரு நாள் ஆகிவிட்டது. அவளது தந்தை தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டார் மகளை வெளியே எடுக்க முடியவில்லை.
ஒருநாள் முழுவதும் கொசுக்கடியில் கவியால் நிம்மதியாக உக்காரக் கூட முடியவில்லை, இயற்கை உபாதைகளை கழிக்க சரியான இடம் இல்லாமல் அப்படியே இடம் இருந்தாலும் அது சுத்தமாக இல்லாமல் இருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டும் கண்களை மூடிக் கொண்டு கழித்தாள்.
ஒருநாளிலையே நரகத்தைக் கண் முன் பார்த்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
கவியின் தந்தையை நம்பி இருக்க முடியாது என செல்வராணி மீண்டும் வளவனிடம் வந்தவர்.
"ப்ளீஸ் தம்பி நீங்க சொன்னா நந்தன் கேப்பான் என் பொண்ணு அங்க ரொம்ப கஷ்டப்படறா. நீங்க மனசு வெச்சா என் பொண்ணு வெளியே வந்துடுவா நீங்கதான் சொல்லணும்" என்று அழுக.
இரக்கக் குணம் கொண்ட வளவனிற்கும் பாவமாக தான் இருந்தது.
யார் சொன்னால் நந்தன் கேப்பான் என இந்த கொஞ்ச நாட்களிலையே மொத்தக் குடும்பமும் கண்டு வைத்திருந்தது.அதனால் நிலாவிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்திவிட்டால் அவள் பார்த்துக்கொள்வாள் என நினைத்து.
வளவன் மூலம் ரதிக்கு செய்திப் போக, ரதியின் மூலம் நிலாவிற்கு வந்து சேர்ந்து விட்டது.
"என்ன இப்படி பன்றாரு? இவரை அடக்க ஆளே இல்லையா? பாவம் யுகி அவன் வாழ்க்கையில இப்படி எல்லோரும் விளையாண்டுட்டு இருக்காங்க." என கத்தினாள் நிலா.
அவள் உடல் இருக்கும் நிலையில் சத்தமாக கத்தக் கூட முடியவில்லை அவளால்.
"உன் அண்ணன் லா மினிஸ்டர் தானே சொல்லு கவியை ஜாமீன்ல எடுத்துடலாம்".என ரதி வளவன் சொன்னது போல் சொன்னாள்.
"அதுக்கு முன்னாடி என்னோட அருமை புருசனுக்குப் போனைப் போடு"
"உன் போன் என்னாச்சு?".
"ஆஸ்பத்திரி வரப்ப யார் போன் எடுத்துட்டு வருவா. அதுக்கு அப்புறம் என் புருஷன் அதை கண்ணுலக் கூட காட்ட மாட்டேன்னு சொல்லிட்டான் ராஸ்கல்" என நிலா முனுமுனுக்க
"நந்துக்கு பயங்கரமா அர்ச்சனை நடக்கும் போல."
"அர்ச்சனையா கையில கிடைச்சா ஆஞ்சிப்புடற அளவுக்கு கோவம் வருது. நான்தான் நடந்ததை விட்டுட சொன்னேன்ல, இப்போ இவரால மொத்தக் குடும்பமும் நிம்மதி இல்லாம நிற்குது. அவளை ஜெயில போட்டு சாதிச்சதுல என்ன வந்துடுச்சி, எதோ நடக்கணும்ன்னு இருந்துருக்கு நடந்துடுச்சுன்னு போக வேண்டியது தானே" என்றவள் பேசிக் கொண்டே ரதியின் எண்ணில் இருந்து நந்தனுக்கு அழைத்தாள்.
"சொல்லு"
"என்ன சொல்றது எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க.?"
"என்ன பண்ணேன்."
"கவியை அரெஸ்ட் பண்ணிருக்கீங்களா?"
"ஆமா"
"அவ தான் பண்ணான்னு நான் சொன்னனா.?"
அடி அறிவு பொண்டாட்டியே அவளே ஒத்துக்கிட்டாடி என்னோட டோமேட்டோ."
"ஓ. அதுக்கு எதுக்கு அரெஸ்ட் பண்ணீங்க? இந்த ஒரு தடவை மன்னிச்சி விட்டுடலாம்ல".
"நான் ஒன்னும் அன்னை தெரசாவும் இல்ல, இயேசுவும் இல்லை."
"நீங்க மனுஷனே இல்லை".
"ஹா இது வாலிடு பாயிண்ட்,"
"மண்ணாக்கட்டி. இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க அவளை விட முடியுமா? முடியாதா?"
"என்னால எதும் பண்ண முடியாது பண்ணவும் மாட்டேன்".
"யுகி பாவங்க."
"அடுத்தவீங்களைப் பத்தி யோசிக்கறதை விடு.அவனா இழுத்து விட்டுகிட்ட தலைவழி அனுபவிச்சி தான் ஆகணும்".
"நான் கவியை ஜாமீன்ல எடுத்துடுவேன்."
"எடுத்தேனா இந்த நந்தன் உனக்கு வேண்டாம்னு அர்த்தம், அதுக்கு மேல உன் விருப்பம்" என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அவனை சமாதானம் செய்துக் கொள்ளலாம் என நினைத்தவள், சங்கரைப் போய் நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
"அண்ணா"
"சொல்லும்மா"
"ப்ளீஸ் கவியை வெளியேக் கொண்டு வாங்களேன்".
"இது நந்தோட முடிவு நான் தலையிட முடியாதும்மா, அக்கா மகன்னு எனக்கு இருக்கறது அவன் ஒருத்தன் தான் அவனை பகைச்சிட்டா எப்படி?"
"நீங்க நினைச்சா அவர் மனசை மாத்தலாம். அவர் உங்கப் பேச்சை தான் கொஞ்சம் கேப்பாரு அண்ணா"..
"அவன் பண்ணத்துல தப்பு இருக்க மாதிரி தெரியலையே"என்றவாறு வெளியே வர, அங்கு ரதி நின்றிருந்தாள்.
"இதெல்லாம் உன் வேலையா?" என்பது போல் அவளை முறைத்துப் பார்க்க.
"என்னைய எதுக்கு மினிஸ்டர் முறைக்கறீங்க.உங்க தங்கச்சிக் கேட்டா முடியும் முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே"
"நீ வாயை மூடிட்டு இருந்தின்னாவே அந்த புள்ளையும் அமைதியா இருக்கும்."
"சொல்லிக்கிட்டாங்க".என ரதி கழுத்தை வெட்டி திருப்ப.
"நீங்க வரலைன்னா நானே போய்டுவேன்" என நிலா வேகமாக வெளியே வர.
"நான் வந்தா கிரவுடு ஆகிடும்மா"
"அப்போ நானே போயிக்கறேன்" என்றவள். செருப்பை போட்டுக்கொண்டு வெளியே வர.
"உன்னய தனியா அனுப்ப முடியாதும்மா"
"அப்போ கூட வாங்க".
"நந்து சொல்லாம வர முடியாது" என கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து இருந்தவனை, ரதி ரசித்துக் கொண்டிருந்தாள்.
"என்ன சில்வண்டு இதுக்குலாம் நீதானே காரணம்."
"ஹா மினிஸ்டர் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க". என ரதி ஜொள்ள
"நீங்க இப்படி பேசிட்டு இருங்க நான் போறேன்" என நிலா வெளியே நடக்க ஆரம்பித்து விட்டாள்.
சங்கர் உடனே நந்தனுக்கு அழைத்தான்.
"என்ன மாமா"
"உன் பொண்டாட்டி அந்த கவியை வெளியே எடுத்தே தீருவேன்னு தனியா கிளம்பிட்டா.கூடப் போறதா வேண்டாமா.?"
"போ."
"உனக்கு கோவமில்லையா?".
"கோவமிருக்கு அதுக்காக அவளை தனியா அனுப்பிட முடியாது. உன்னால போக முடியும்ன்னா நீ போ, இல்லனா யாரையாவது அனுப்பி வை. அவ நினைக்கிறதை செய்யட்டும் நான் நினைக்கறதை நான் செஞ்சிக்கறேன்".
"சரி " என்றவன் யாரையும் அனுப்பாமல் அவனே உடன் சென்றான்.
"ஏய் லா மினிஸ்டர் வந்துருக்காருடா." என காவல் நிலையம் பரபரப்பு ஆக.அவர்களுக்கு முன்பு நந்தன் அங்கிருந்தான்.
யுகி, வளவன், ஷாலினி, ராஜியை தவிர மொத்தக் குடும்பமும் அங்கிருந்தது.
நிலா காரை விட்டு கீழே இறங்கி நடக்க, அவள் அருகில் ஓடிவந்த செல்வ ராணி.
"அன்னிக்கு நான் பேசுனது தப்பு தான்ம்மா, என் மகப் பண்ணதும் தப்பு தான், இனி அப்படி பண்ண மாட்டாம்மா ப்ளீஸ் அவளை எப்படியா வது வெளியே கொண்டு வந்துடும்மா" என கெஞ்சினார்.
"ஒரு ஜாதி குறைவான பொண்ணுகிட்ட இந்த அளவுக்கு கெஞ்சறீங்களே, இப்போ உங்க கவுருவத்துக்கு குறை வராத அத்தை" என நந்தன் நக்கலாக கேக்க.
செல்வராணி ஆடிப்போய்விட்டார்
"தப்பு தான் நந்து அதுக்காக பழி வாங்குற நேரமா இது?, ப்ளீஸ்ப்பா என் பொண்ணை விட்டுடுங்க" என அழுக.
"இதெல்லாம் செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்" என்றவன், "நான் அவ்வளவு சொல்லியும் வந்துட்ட.." என்றான் நிலாவைப் பார்த்து.
"அது..."
"என்ன தியாகி இருந்தா செலை வைக்கிறேன்னு எவனாவது சொன்னானா?"
"இல்ல" என அவள் தலையை ஆட்ட
"நீ பண்றதைப் பண்ணு நான் பண்றதைப் பண்ணிக்கறேன்."என நந்தன் அவன் பிடியில் உறுதியாக நின்றான்.
அதன்பிறகு நிலா யாரையிடமும் பேசவில்லை,நேராக கவியிடம் போய் நின்றவள்.
"சார் இவங்ககிட்ட நான் பேசணும்"என்றாள்.
அந்த இன்ஸ்பெக்டரோ சங்கரையும், நந்தனையும் தான் பார்த்தார்.
அவர்கள் இருவரும் ஒரு சேர தலையை ஆட்ட அதன் பிறகு இன்ஸ்பெக்டரின் பதில் எதுவாக இருக்கும் என நிலாவிற்கு தெரியாதா என்ன?",
"கவி ஏன் இப்படி பண்ணுனன்னு கேக்க மாட்டேன்.ஏதோ என்மேல இருக்கற கோபம், வெறுப்பு இப்படி பண்ண வெச்சிருச்சி" என்று தொண்டையை செருமிக் கொண்டவள்.
"ஒபனா சொல்றேன்.நானும் யுகியும் பொறந்ததுல இருந்தே இப்படி தான். அவரும் எங்க உறவை அப்படியே ஏத்துக்கிட்டு தான் என் வாழ்க்கைக்குள்ள வந்தாரு. அதே மாதிரி தான் நீயும், எங்களை ஏத்துக்க முடியலைன்னு சொல்லிருந்தா ஒன்னு நானோ இல்லை அவனோ விலகிப் போயிருப்போம். ஏனா எங்க ரெண்டுபேருக்குமே எங்களோட சந்தோசத்தை விட மத்தவீங்க சந்தோஷம் தான் முக்கியம். நீ சொல்றியே சோறுப் போட்டளோ பேசுனாலோ எங்களுக்குள்ள தப்பான உறவு வந்துடும்ன்னு, அப்படி வரணும்ன்னா நீ அவன் வாழ்க்கைக்குள்ள வரணும்னு அவசியமே இல்லாம போயிருக்கும். யோசிச்சிப் பாரு நாங்க என்ன புதுசாவ ஒவ்வொரு விசயத்தையும் செய்யறோம் எல்லாமே 25 வருசமா செய்யற ஒன்னு தான் அப்போல்லா தப்பா போகாம தான் இப்போ போகப் போறோமா? பார்க்கறவீங்க கண்ணுல தான் பிரச்சனை. உன்னோட கண்ணை மாத்துணும்னு சொல்லல்ல பார்க்கற பார்வையை மாத்திப் பாரு தப்பா தெரியாது.அவன் என்னைய காதலிச்சான்னு எனக்கு தெரியாது, தெரிஞ்சிருந்தாலும் என்னோட மறுப்பை தான் சொல்லிருப்பேன். அதனால பயப்படாம அவன்கூட சந்தோசமா வாழு.. ப்ளீஸ் எனக்கு யுகியோட சந்தோசம் தான் முக்கியம்" என்றவள் "நான் என்ன பண்ணுனா நீ யுகியோட சந்தோசமா வாழுவன்னு சொல்லு சாகட்டுமா. செத்துட்டா நீ அவனோட சந்தோசமா வாழுவியா?".என நிலா பரிதவிப்புடன் பேசினாள்.
நிலாவின் பேச்சைக் கேட்டதும் இவ்வளவு நாள் இல்லாத குற்றவுணர்வு இப்போது வந்து ஒட்டிக் கொண்டது.
"எனக்கு அவன் சந்தோசத்தைக் காட்டிலும் என் சந்தோசம் முக்கியமில்லை என்ன பண்ணுனா நீ அவனோட சந்தோசமா இருப்பேன்னு சொன்னினா அதையும் செய்வேன்". என்றாள் கண்ணீர் துளிர்க்க
"என் தப்புதான்" என கவி எங்கையும் வாய் திறந்து சொல்லவில்லை. அமைதியாகப் பார்த்திருந்தாள்.