Total Views: 1481
நிலாவே காரை ஓடிக் கொண்டுப் போய் அடந்த காட்டில் முன் நிறுத்தினாள்.
இங்கு தான் நந்தன் நிலாவை அன்று காயப்படுத்தி அனுப்பினான், அதன்பின் தான் பெங்களூரு சென்றாள்.
இந்த இடம் அவளுக்கு அவ்வளவு ஸ்பெஷல்.
அவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு முன்புக் கூட ஒருமுறை தனியாக வந்து வெகுநேரம் அமர்ந்து விட்டு சென்றிருந்தாள்.
வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாளாக தானே அன்று அவளுக்கு நேர்ந்த தாக்கத்தை எண்ணினாள்.
"இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?" என்று எரிந்து விழுந்தான்.
"இப்போ எதுக்கு கத்தற...? இந்த இடம் எப்படி இருக்குடா?" என இயற்கை காற்றை ஆழ சுவாசித்தாள்.
முன்பு போல் அவள் கண்களில் துள்ளல் இல்லை, உடல் மெலிந்து மிகவும் சோர்வாக தெரிந்தாள், அதை கவனித்துக் கொண்டே
"ம்ம்" என்றான்.
"இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கியா?"
"இது ரொம்ப முக்கியமா?"
"சொல்லு"
"இல்ல"
"நான் வந்துருக்கேன்"
"கல்யாணத்துக்கு அப்புறமா?"
"இல்லை அதுக்கு முன்னாடி "
"நான் இல்லாம எப்போ வந்த?".
"உன் அண்ணன் தான் கூட்டிட்டு வந்தாரு! என்றவள் அன்று நடந்ததைச் சொன்னாள்.
முன்பு இருந்த யுகியாக இருந்தால் இந்நேரம் அடிக்கப் போகிறேன் என துள்ளி இருப்பான். இன்று இருக்கும் யுகி 'அவ புருஷன் பண்ணியிருக்கான்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டான்.
"என்ன எதுமே சொல்லாம இருக்க?"
"நான் சொன்னா மட்டும் நீ அப்படியே கேட்டுடப் போறியா..?"
"ஓ. சரி இப்போ எதுக்கு இதை சொன்னேன் தெரியுமா?"
"அதையும் நீயே சொல்லு".
"உன் அண்ணன் என்கிட்ட எப்ப பேசுனாலும், என்கிட்ட அவன் தான் முதல்ல இருக்கனும்ன்னு பேசுவான். அதுல பொறாமையையும் தாண்டி எதோ ஒன்னு இருக்குன்னு எனக்கு புரிஞ்சிது.அதையும் பெங்களூரு போனதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிக்கிட்டேன். அவனாவது எப்பையாவது ஒருதடவை பேசறவன், பேசறப்பலாம் அவனையும் அறியாம எதையாவது என்கிட்ட உணர்த்தி அவன்மேல ஒரு ஈர்ப்பு வரவெச்சுட்டான். நீ எப்போமே பேசறவன் தானே உன் மனசுல என்ன இருந்துச்சின்னு நீ ஏன் யுகி எனக்கு உணர்த்தாம போன.. இத்தனை வருசத்துல ஒருதடவை உணர்த்திருந்தா போதுமே. என்னைய அடிச்சி கஷ்டப்படுத்துன அவனையே விரும்ப ஆரம்பிச்சவ, என் மேல தூசிக் கூடப் படாம பார்த்துகிட்ட உன்னைய வேண்டாம்ன்னு சொல்லிருப்பனா." என்றாள் கலங்கிய குரலில்.
"பூனை......"என யுகி அதிர்ச்சியாகி அவளைப் பார்க்க
"ஹா இந்த பூனைங்கற வார்த்தையை நீ ஒவ்வொரு தடவைக் கூப்பிடும் போதும், உன் வார்த்தையைக் கூட நான் தப்பா பார்த்ததில்லடா. அம்மாவோட கருவறையில இருக்கும் போதும் எந்தக் குழந்தைக்காவது தன்னோட தாய் தன்னை சரியா பார்த்துப்பாளான்னு சந்தேகம் வருமா.?, வராதுல அது மாதிரி தான் நான் உன்கூட இருக்கும் போதும் எனக்கு நீ அப்படி யோசிச்சிருப்பியான்னு யோசிக்க தோணலைடா". என்றவளின் கண்கள் கலங்கிவிட்டது.
"இப்போ எதுக்கு அழற? என்மேல தான் தப்பு ஒன்னு சொல்லிருக்கனும்,இல்லனா பண்ணிருக்கவேக் கூடாது.இப்போவும் நீ என்னய விட்டுப் போய்டுவியோன்னு பயந்து தான் இவ்வளவும் பண்ணி வெச்சிருக்கேன். அவசரப்பட்டு அவளைக் கல்யாணம் பண்ணி உன்னைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல பூனை"
"சரி விடு நம்ப பிரச்சனை முடிஞ்சிப் போனது. இனி எதுவும் மாறப் போறதில்ல, இருக்கறதை அப்படியே ஏத்துக்கப் பழகுவோம்," என்றவள் "கவி விசயத்துக்கு வருவோம்." என்றாள்.
"அவளைப் பத்தி பேச எதுவுமில்லை".
"இருக்கு. உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கறேன் சரியா சொல்லு"
"ம்ம்"
"நான் உன்னைய காதலிக்காம அவரைக் காதலிச்சது எவ்வளவு வலிச்சது உனக்கு."
"இப்போ எதுக்கு அது?"
"சொல்லு"
"ஆமா பயங்கரமா வலிச்சுது"
"நான் உனக்கு பண்ண தப்பையே தானே,நீயும் கவிக்கு பண்ற. எனக்காவது உன்னோட வலி தெரியாது, ஆனா உனக்கு தெரியும்ல ஒரு நிராகரிப்பின் வலி எப்படி இருக்கும்ன்னு. கவி உன்னைய உண்மையா விரும்பறா, உன்னைய யாருக்கும் விட்டுக் கொடுத்துடக் கூடாதுன்னு நினைக்கிறா அதுல தப்பிலையே."
"அந்தக் கோவத்தை என்கிட்ட காட்டட்டும்,உன்கிட்ட எதுக்கு காட்டுறா.?"
"என்னால தானே நீ அவளை அவொய்ட் பன்றேன்னு நினைக்கற,அப்போ என் மேல தான் காட்ட முடியும். உக்கார்ந்து யோசி கண்டிப்பா அவ பண்ணது தப்பு தான் ஆனால் அந்த தப்பை செய்ய தூண்டுனது நம்ப தானே , அவ பக்கம் இருந்து யோசி தப்போட அளவு பெருசா தெரியாது".
"நீ என்ன சொன்னாலும் என் மனசு மாறாது."
"மாறும்" என்றவள். "நீ என்னைய எப்படி நினைச்சாலும் நான் உன்னைய என்னோட அப்பாவா, என்னோட குழந்தையா தான் பார்த்தேன், பார்க்கறேன், பார்ப்பேன். குழந்தை தப்பு பண்ணா அம்மா தூக்கி எறிஞ்சிடமாட்டா.. இந்த நிலா உயிர் இருக்கற வரைக்கும் யுகி கூடவே இருப்பான். இது இவ்வளவும் நடந்ததால சொல்லல , எப்போ கேட்டாலும் இதை தான் சொல்லிருப்பேன்". என்று அவனது தலையைக் கலைத்து விட்டவள்.
"உன்னோட பூனையோட பூனைக்குட்டியைப் பார்க்கனும்னு ஆசையில்லையாடா." என்றாள் கண்களில் மின்னலுடன்.
அவன் அவளை ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் பார்க்க.
"இப்போதைக்கு பூனைக்குட்டி வரல. அது வரணும்ன்னா நீ உன் பொண்டாட்டியோட சேர்ந்து வாழனும்".
"என்ன பிளாக்மெயில் பண்றியா?" என கோவமாக அவளை முறைக்க.
"இந்த முறைப்புலாம் உனக்கு செட்டாகல, ஒழுங்கா நான் சொன்னதை செய். இப்போக் காரை எடு அங்கேப் போய் என் புருஷனை சமாதானம் பண்ணனும். இதுவே எனக்கு வேலையா போச்சு ஆள் மாத்தி ஆள் மூஞ்சைத் தூக்கி வைக்கறதும் நான் சமாதானம் பண்றதும்ன்னு" என காரின் முன் பக்கம் ஏறி அமர.
"நீ என்ன சொன்னாலும் எனக்கு அவ வேண்டாம் பூனை"
"சரி போ. எனக்கு என்ன?.உனக்கு உன் பூனையோட பூனைக்குட்டி வராது" என கண்களை மூடிக் கொண்டாள்.
யுகிக்கு நிலா சொன்னது கஷ்டமாக இருந்தாலும், இந்த முறை அவசரப்படக் கூடாது நிதானமாக தான் யோசிக்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டான்.
கார் நேராக வீட்டிற்குப் போக. மணியின் மடியில் படுத்து உறங்குவது போல் கண்களை மூடியிருந்த நந்தன், கார் சத்தம் கேட்டதும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
நிலா உள்ள வந்தவள்."நான் அம்மாவைப் பார்த்துட்டு வரவா விஜய்".என்றாள்.
"அவன் தூங்கறான் நிலா நீ போ." என மணி சொல்ல.
"தூங்கறாரா பார்த்தா அப்படி தெரியலையே" என யாருக்கும் தெரியாமல் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ராஜியைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
"கொழுப்பு எடுத்தவ..." என்றவனின் உதடுகள் விரிந்துக் கொண்டது. எவ்வளவு கோவமிருந்தாலும் அவள் மீது மட்டும் அதைக் காட்ட முடியவில்லையே காதல் செய்யும் விந்தை தான் என்ன?.
"நீ தூங்கலைன்னு கண்டுபிடிச்சிட்டா நந்து."
"நீயும்மா அம்மா" என்று எழுந்து அமர்ந்தவன். "போய் காபி கொண்டுவாங்க" என்றான்.
"பிரச்சனை எல்லாம் முடிஞ்சிதா நந்து.?" மணி ஆர்வமாக கேக்க.
"ம்ம் இந்த யுகி செட்டில் ஆகிட்டா முடிஞ்சிது"
"அப்போ அந்த சரஸ்வதி உஷா லாம்".
"அவங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேன்னு நினைச்சீங்களா?" என்றவன் சரஸ்வதியை அவன் படுத்தியப் பாட்டை சொன்னான்.
"
ஆமாம் சரஸ்வதியின் குடும்பத்தை ஓட ஓட விரட்டி அடித்து விட்டான் நந்தன். சரஸ்வதிக்கு வேலையும் போய்விட்டது.
அவள் வேலையை நம்பி வாங்கி வைத்த கடன்கள் அனைத்தும் அவர்களைப் பார்த்து சிரிக்க. எங்கும் வேலைக் கிடைக்காத மாதிரியும் செய்துவிட்டான்.
கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க வேறு வழி தெரியாமல் கிடைத்த வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறாள். இதில் நந்தனைப் பற்றி எங்கு யோசிக்க.
உஷா மாசமாக இருந்ததால் இப்போதைக்கு விட்டுவிட்டான்.
யுகி சோபாவில் வந்து அமர. படுத்திருந்த நந்தன் எழுந்து அமர்ந்துக் கொண்டான்.
"என்னடா டீச்சர் பாடம் எடுத்து அனுப்பிட்டாளா.?"
"ம்ம்"
"அப்புறம் என்ன முடிவு பண்ணிருக்க?".
"தெரியல".
"ஒன்னும் அவசரமில்லை பொறுமையா யோசிச்சி முடிவு பண்ணு
"அவளை எப்பிடிடா மன்னிக்கறது?"
"கவியையா?"
"ம்ம்"
"காதல் வந்தா மன்னிப்பும் தானா வந்துடும். லவ் பண்ணிப் பாரு."
"ஒன்னு பண்ணதே வாழ்க்கை பிச்சிட்டுப் போய் நிற்குது "என முனவ.
அது நந்தனுக்கு தெளிவாக கேட்டது.அவன் எதுவும் சொல்லாமல் கையை தொடையில் தட்டிக் கொண்டவன்.
"உன் வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும்" என எழ. இருவருக்கும் சேர்த்து காபிக் கொண்டு வந்தார் மணி.
அவரைப் பார்த்த யுகி. பேசாமல் காபியை எடுத்துக்கொண்டான்.
"தம்பி யுகி".
அவன் பேசாமல் இருக்க.
"உன்னைய தாண்டா கூப்பிடறாங்க".
"தெரியுது"
"தெரியுதுல பேசறதுக்கு என்ன.?"
"எனக்கு விருப்பமில்ல".
"ஹப்பா முடியல என்னமோ பண்ணுங்க,நான் கிளம்பறேன். அடியே குண்டாத்தி எங்கடிப் போன?".
"வந்துட்டேங்க" என நிலா ஓடி வந்தாள்.
"கிளம்பு".
"இங்கையே இருக்கலாம்ல" என யுகி,மணி இருவரும் ஒருசேர சொல்ல.
வேண்டா நாங்க அங்கையே இருந்துக்கறோம். அப்போ அப்போ வந்துட்டுப் போறோம்"என நிலாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
"விஜய்..."
"என்ன?"
"கோவம் போய்டுச்சா கையெல்லாம் புடிச்சி இழுத்துட்டு வரீங்க."
"ஆமா இவ பெரிய உலக அழகி. பார்த்தோனா இவ பேசுனதுலாம் மறந்து கோவம் போறதுக்கு போடி" என்றானே தவிர அவளது கையை விடவில்லை.
வீட்டிற்குப் போன கவியை நன்கு புடைத்து விட்டார் செல்வராணி.
"அம்மா அடிக்காதம்மா வலிக்குது"
"வலிக்கட்டும் எவளோ சொன்னான்னு வாழ்க்கையை கெடுத்துட்டு வந்து நிற்கற கொஞ்சமாவாது அறிவு இருக்கா உனக்கு?".
"நீதானம்மா அந்த நிலாவை அடக்கி வை, இல்லனா தலைமேல ஏறி ஆடிடுவான்னு சொன்னா?"
"அதுக்குன்னு உன்னை விஷம் வைச்சிக் கொல்ல சொன்னானா.?"
"அவள யுகி லவ் பண்ணி இருக்காமா"
"இந்தக் காலத்துல ஒரு காதல், ஒரு வாழ்க்கைன்னு,வாழறது தான் கஷ்டம் லவ் தானே பண்ணுனேன் வேற எதுவும் பண்ணலையே. இப்போ நிலா மட்டும் இல்லனா இந்நேரம் ஜெயில் கழி தின்னுருக்கனும், அவளையே கொல்லப் பார்த்தவன்னு தெரிஞ்சும் காப்பாத்த எவ வருவா,?"
"அம்மா.."
"ஆமா அவ நம்பல விட ஜாதிக் குறைவுன்னு சொன்னவ தான். அதுக்காக அவளைக் கொல்லற அளவுக்கு போகச் சொன்னேனா. இப்போ பாரு அவன் வேண்டாம்னு சொல்லிட்டான். இனி உன்னைய எப்படி அவன் கூட சேர்த்துவைப்பேன்"என்றவருக்கு மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையாக இருக்க தலையில் கை வைத்து உக்கார்ந்து விட்டார்.
கவிக்கு இப்போது தான் சுற்றம் புரிய ஆரம்பித்தது.
காதலிக்க காதல் மட்டும் போதுமானது இல்லை. சுற்றி இருப்பவர்கள் வேண்டும், உண்மையான உறவுகள் வேண்டும் என்று புரிந்தது.
அறைக்குள் சென்று அழுதாள். இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகையை அழுது தீர்த்தாள்
அழுது கரைந்து மனதில் இருந்த அழுக்கை எல்லாம் கழுவிய பின்பு தான் மனம் தெளிவு ஆனது. யோசித்தாள் நிறைய யோசித்தாள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது. என நிறைய யோசித்தாள்