இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கூத்தனின் கூத்து -3 அனைத்து பாகங்கள் படிக்க
By பரணி உஷா Published on 22-08-2025

Total Views: 79

பாகம்-3
பேத்தி அமர்ந்து ஸ்லேட்டில் கோடு போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
குட்டிப் பாப்பா என்ன பண்ணறீங்க ? பாத்திரம் தேய்த்து விட்டு ஈராக் கையைத் துடைத்துக் கொண்டு வந்தார் பாட்டி.
" கோடுப் போட்டுப் பார்க்கிறேன் பாட்டி.நேராவே வர மாட்டேங்குது"
"ஏன் நேர வரல?கொடுப் பார்க்கலாம். பேத்தி சொன்னது சரிதான். கோடுகள் நேராகவே வரவில்லை.
பேத்தியின் கையைப் பிடித்துக் கோடுகள் போட வைத்தாள். இவள் தனியே போட்டுப் பார்த்தாள். இப்போது போட்ட கோடுகள் ஓரளவு சரியாக வந்தது. ஆசையுடன் பாட்டியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் பேத்தி. 
“அது இருக்கட்டும். பெரும் பற்றப் புலியூர் விடை தெரிந்ததா ?”
“கண்டுபிடிச்சிட்டேனே !"
"கண்டுபிடிசிட்டியா எப்படி ?"
"நம்ம ராக்காயி பாட்டிகிட்ட கேட்டேன் "
"அட ! பரவாயில்லையே ! சிதம்பரத்துக்காரி கிட்டயே கேட்டுடியா. சரி அந்த ஊரு ராஜா நடராஜா. அதே நடராஜா வேற இன்னொரு இடத்துலயும் இருக்காரு. இது உனக்குக் கண்டுபிடிக்கவே முடியாது "
" அதையும் தான் பார்க்கலாமே. நீ முதல்ல கேள்வியைச் சொல்லு "
நீ கோவிலுக்குப் போகும்போது முதல்ல எதைப் பார்த்துக் கும்பிடுவ?"
"ராஜகோபுரம் "
“கோணலா கோடு போட்டா ?"
"புரியலையே! "
"சரி ! போன புதிருக்குச் சரியா பதில் சொன்ன. அதனால இந்தத் தடவை நானே பதில் சொல்லறேன். ஆனா இப்ப ஒனக்கு நான் ஒரு விஷயம் சொல்லுவேன். அதைச் செய்யணும். அப்படின்னா நான் விடை சொல்லுவேன்."
"செய்யறேன் பாட்டி. நீங்கச் சொல்லி நான் கேக்காம இருப்பேனா ?"
பேத்தியின் கொஞ்சல் அழகுதான்.
" நான் இப்ப சொன்ன ஊருக்குப் பேரு கோனேரிராஜபுரம். இதைத் திரு நல்லம் அப்படின்னும் சொல்லுவாங்க. இங்கயும் நடராஜா தான். சிவகாமி தான். இவருக்கு வேற பெயர் பூமிநாதர். 
"அப்படின்னா இந்தப் பூமிக்கே தலைவர்னு அர்த்தமா ?"
"ஆமா ! உனக்கு நான் இன்னொரு விஷயமும் சொல்லிக் கொடுக்கணும். தினமும் நீ எழுந்துக்கும் போதும் பூமித் தாயாருக்கு கை எடுத்துக் கும்பிட்டு, 
அம்மா! தாயே! நான் இன்னிக்கு மிதிக்கப் போறேன். என்ன மன்னிச்சுடுன்னு சொல்லி கண்ணுல ஒத்திக்கிட்டு எழுந்துக்கணும். அதே மாதிரி படுக்கும்போதும் இன்னிக்கு நாள் முழுக்க உங்களை நிறைய கஷ்டப் படுத்தி இருக்கேன். என்ன மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்லிக் கண்ணுல ஒத்திக்கிட்டு படுக்கணும். அகழ்வாரைத் தாங்கும் நிலம். அதாவது, நாம இந்த பூமியை எத்தனை கஷ்டபடுத்தறோம். மிதிக்கறோம். குதிக்கறோம் . பள்ளம் நோண்டறோம். இருந்தாலும் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு நமக்கு சாப்பிட உணவு கொடுக்கறவங்க தானே இந்த பூமித் தாய். அவங்களுக்கு நாம் தினம் தினம் நன்றி சொல்லணும். பண்னுவியா?"
"ஓ ! பண்ணறேனே "
கண் விரித்துச் சொன்னவளை முகம் வழித்துத் திருஷ்டி கழித்தார். கோனேரி ராஜபுரம் இன்னும் முடியவில்லை. பாட்டி பேத்தி உரையாடல் அடுத்தப் பகுதியிலும் தொடரும்....
============================================================================

"அப்பா நமக்குப் பகவான் குடுக்கறதே போறும்"
சொன்ன மகனின் வார்த்தைகள் எரிச்சலைத் தர ஆங்காராமாகக் கத்தினாள் பத்மா.
"ஆமா ! வந்துட்டாரு பெரிய மனுஷன் அறிவுரை சொல்ல. மார்க்கு வாங்க துப்பில்லை. பெரியவா விஷயத்துக்கெல்லாம் மூக்கை நீட்டிண்டு. இங்க பாரு நடராஜா, நீ மட்டும் இந்தத் தடவ கணக்குல நூத்துக்கு நூறு வாங்கலைன்னா தோலை உரிச்சு தொங்க விட்டுட்டுடுவேன் ஜாக்கிரதை. ஏதோ உன்ன பாஸ் போடறேதே நான் அந்த ஸ்கூல்ல டீச்சருங்கறதுனாலதான். போ ! கனவுல சஞ்சரிக்காம போய்ப் படிக்கற வழியப் பாரு"
ஆறாம் வகுப்புவரை நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவன்தான். ஆனால் அந்தப் பதினோரு வயசு சமயம் ஆகும்போது அவனுக்கு என்னவென்றே சொல்ல முடியாத பல விதமான சிந்தனைகள் வரத் தொடங்கி இருந்தன. கண்டிப்பாகா அது வயதுக்கு வரும் பிரச்சனை அல்ல. வேறு ஏதோ. என்னவென்று அவனுக்கேச் சொல்லத் தெரியாதது. படிப்பான். படித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று அப்படியே அவனை நிறுத்திவிடும். பிறகு நடப்பது எதுவும் அவனுக்குத் தெரியாது. படித்தததும் தெரியாது. மீண்டும் முதலிலிருந்து. 
நிறைய மருத்துவர்கள், மன நோய் நிபுணர்கள் ஹிப்னாடிசம் எதுவும் சரி வரவில்லை. அவனுக்குள் இருந்தது ஏதோ ஒரு தேடல். தேடலின் விடை ஒருவரால் மட்டுமேத் தர முடியும். அது எப்போது அவனுக்குக் கிடைக்கும்? அது அவனுக்கேத் தெரியாதபோது மற்றவர்களுக்கு மட்டும் எப்படி புரிய போகிறது?ஆறு, ஏழு, எட்டு.தொடர்ந்த பயணம். இதோ ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் வந்து நிற்கிறது. எப்போது அவன் மதிப்பெண் குறைய ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அவன் மதிப்பும் குறைந்திருந்தது. இந்த உலகத்தில் படிப்பு தான் எல்லாமே. அதிலும் பிராமண சமூகம், படிப்புத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள்.
வேங்கட சுப்பிரமணி மனைவியை மிகவும் நேசிப்பவர். அது காதல்தான். காமம் கலந்த காதல். அதே சமயம் அவள் எது சொன்னாலும் சரியாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு உண்டு. அவள் மிகவும் ஸ்மார்ட். தனக்குத் தெரியாத பல விஷயங்களும் அவளுக்குத் தெரியும். அதனால் தானோ என்னவோ அவள் அளவுக்கு மீறி வார்த்தைகளை விடும்போது கூட அவர் அவளைக் கண்டித்ததில்லை. மனைவியைவிட அதிகம் படித்தவர் தான். இருந்தாலும் அவருக்குள் இருந்த ஏதோ ஒன்று தன்னைத் தாழ்வாகவே நினைத்துக் கொள்ள வைத்தது. அல்லது மனைவியின் அதிகாரமான நடை உடை பாவத்தினால் அடிங்கியும் போய் இருக்கலாம். எனக்கு அவர்களைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமில்லை. உங்களுக்குச் சொல்ல வேண்டும். அது என் கடமை. இல்லை என்றால் உங்களுக்கு நம் நாயகன் நடராஜனை பற்றித் தெரிந்துக் கொள்ள முடியாது.

வெங்கிட்டுவின் மனைவி சொல்வது போலவே தான் மகனும் நடந்துக் கொள்கிறான். இது அவரின் எண்ணம்.
பள்ளியில் இருந்தும் ஏகப்பட்ட குறைகள்.
"அது என்ன? நான் இங்க பாடம் சொல்லிக் கொடுக்கும்போது உங்க பையன் ஜன்னல் வழியா வேடிக்கை பாக்கறான்?" இது ஒரு ஆசிரியர்.
" நான் போர்டுல எழுதறது சரியில்லையாம். புள்ளி வச்ச எழுத்துக்களுக்குச் சுழிக்கக் கூடாதாம். புள்ளி தான் வைக்கனுமாம். என்னோட தமிழ கரெக்ட் பண்ணறாரு சாரு" தமிழ் ஆசிரியை முகத்தில் அத்தனை கோபம்.
"நான் எதையோ கேட்டா அவன் எதையோ சொல்லறான்" என்னால இந்த மாதிரி ஒரு மோசமான புள்ளைக்கு பாடம் நடத்த முடியாது." இது கணக்கு ஆசிரியை.
"என்ன நாய் வரைய சொன்னா பேய் வரைஞ்சு வச்ருக்கான். நீங்க அறிவியல் சொல்லிக் கொடுக்கறவங்க தானே? உங்களுக்குத் தெரியாது? இப்படி இருந்தா அவன் எப்படி சயின்ஸுக்கு டையக்ராம் வரைய முடியும்? மார்க் எப்படி வரும்?"
மற்ற ஆசிரியைகளும் தங்கள் பங்கிற்கு நன்றாகப் போட்டுக் கொடுத்தார்கள்.
பத்மாவிற்கு தான் ஒரு ஆசிரியை. , வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல நடராஜன் ஆகி விடுவானோ என்று பயம். அதனாலேயே அவள் மற்ற விஷயங்களிலும் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். ஒரு வித மன வியாதிதான். மகனை மருத்துவர்களிடம் காட்டியதற்குப் பதிலாகப் பத்மா சுய பரிசோனை செய்துக் கொண்டிருக்கலாம். 
பத்மா லௌகீக விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். படிப்பைப் போலவே. 
"ஏன்னா ! வனஜாவை பார்த்தேளா? கார்த்தால பச்சை கல் மாங்கா நெக்லஸ்ல வந்து நின்னா. அடுத்த சித்த நாழைக்கெல்லாம் புள்ளைக்கு பூணல் ஆகரச்சே வைர அட்டிகைல வந்து நிக்கறா. அப்பா! அந்த எட்டுக்கல் பேசரியும், முத்து மூக்குத்தியும், வைர நகைகளும், என்ன அழகு? வந்தவா எல்லாரும் அதைப் பத்தியேத் தான் பேச்சு.
அன்னை ஆச்சர்யமாகப் பேசிக் கொண்டிருக்க, அவளை ஆச்சர்யமாக விழி விரித்துப் பார்த்திருந்தான் நடராஜன். மாங்காய் நெக்லஸ் பச்சக் கல், வைர மணி இவை எல்லாம் அவனுக்கு வேறு ஏதோ நினைவு படுத்தியது. வேறு யார்? நம் கூத்தப் பிரான் தான். ஆனந்த தாண்டவம் ஆடும் அவனை -அவன் நினைத்துக் கொண்டிருக்கட்டும். நாம் வேறு சிலரைப் பார்த்து விடலாம்.
சிவா ! வழக்கமான வர்ணனைகள் தான். ஆறடி ஆண் மகன். அதற்கு ஏற்றாற்போல உடற்கட்டும் கொண்டவன். அவனின் நிறம் இன்னதென்று சொல்ல முடியாது. பணக்கார செழிப்பைக் காட்டும் நிறம். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள். சிரித்தால் அசோ முத்துக்கள் கொட்டி விடுமே என்று பெண்களின் மனம் பதபதைக்கும். என்னையும் கொஞ்சம் சேர்த்துக் கோயேன். அவனின் விரல்களுக்குள் நம் கைக்கோர்க்கலாமா? ஏங்காத கன்னிகள் இல்லை. 
என்ன இருந்து என்ன? இவன் ஒன்றும் ஒழுக்க சீலன் எல்லாம் இல்லை. பெண்கள்மீது ஏனோ ஆர்வம் ஏற்படுவதில்லை. இந்திய பெண்கள்மீது மட்டும். அவனைப் பொறுத்தவரை இந்திய பெண்கள் எட்டு முழம் புடவை அணிந்துக் கொண்டு இல்லாத வெட்கம் இருப்பது போலக் காட்டி நடிப்பவர்கள். அதற்கு எல்லாம் அவனைக் குறை கூற நான் தயாராக இல்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். இருக்கவே இருக்கிறான். நம் வில்லன்(நாயகன்) விதி அவன்மீது எளிதாகப் பழி போட்டு விடலாம். அதுவும் வசதி தான். இனி கதையைக் கூறப் போவதும் அவன் தானே. அதனால் வாசகர்கள் திட்டுவது என்றால் அவனையே திட்டிக் கொள்ளட்டும்.அதாவது அது அடியேன் தான். கதையில் மட்டும்.

காலம். அவன்தான் சிவாவின் அன்னையின் விதியை முடித்தது. ஒரு அன்னையாகப் பொறுப்பாக உயிரோடு இருந்து பிள்ளையை வளர்ந்திருந்தால் அவனுக்கு நம் பண்பாடு, கலாச்சாரம்பற்றித் தெரிந்திருக்கும். காதல் கணவனோடு இந்த லண்டனில் வந்து குடியேறியவள் பிள்ளைக்கு இரண்டு வயதாக இருக்கும்போது கேன்சர் வந்து அவனின் நான்காம் வயதில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். 
இந்திய நாட்டின் மீதும் பண்பாடு கலாச்சாரத்தின் மீதும் துளியும் அக்கறையோ அல்லது நம்பிக்கையோ இல்லாதவன், இதோ வந்து நிற்கிறான் நம் பூமியில். அவன் வந்து இறங்கிய இடம் சிவனூர்.
யார் என்கேப் பிறந்து எப்படி வளர்ந்தாலும், 'நீ என்னுடையவன் என் மகன்' என்று அவர் நினைத்துவிட்டால் ?
"நீங்கச் சொன்ன இடம் இதுதாங்க" சொல்லி விட்டு இறக்கி விட்டுப் போனது அவன் வந்த கார்.
"அக்கா! அக்கா ! இந்தச் சாரு என்னன்னெமோ பேசறாங்க. எனக்கு ஒன்னும் புரியல. அதான் அம்மா உங்க கிட்ட பேசிக்க சொன்னாங்க" சொல்லி விட்டுப் போய் விட்டாள் பெட்டிக் கடை வைத்திருக்கும் பெண். பாவாடை தாவணிப் போட்டு காய் நிறைய கண்ணாடி வளையலும், நீளமான அடர்த்தியான கூந்தலில் கனகாம்பரமும் வைத்திருந்தாள் அந்த பூக்கடைக்காரப் பெண் . வெள்ளைத் தோள் அழகிகளை பார்த்தவனுக்கு நம் ஊர் நிறம் சற்று மாறுபாடாக இருந்தது.

அந்தப் பெண் காட்டி விட்டுப் போன அந்த மற்றொருப் பெண், அங்கே நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு கண்கள் விரிந்தன. அங்கே அவன் கண்ட காட்சி!
நிச்சயம் பார்ப்பவர்களை விழி விரிக்க வைக்கும் அவனும் அப்படித்தான் நின்றான் சில நொடிகள்.
அவன் பார்த்த பெண்ணின் ஒரு தோளில் அணிலும், மற்றொரு தோளில் கிளியும், அவள் புடவையை முட்டிக் கொண்டு ஒரு சிறு கன்று குட்டியும் இருந்தன. அவள் அந்த அணிலுக்கு ஏதோ கொடுத்துக்கொண்டிருந்தாள்.
இவனைப் பார்த்துச் சட்டெனத் திரும்பிப் பார்க்கவும், அந்தக் கிளி இவள் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டது பயத்தில். அணில் இரு கைகளையும் சேர்த்து அவள் தலையைப் பிடித்துக் கொண்டது.
"ஸ் ஆ! அழுத்திப் பிடிக்காதடீ! வலிக்குது" கிளியைச் செல்லமாகத் திட்டியவள், அவன் உருவத்தை வைத்தே புரிந்து கொண்டாள் அவன் வெளி நாட்டு வாழ் இந்தியன் என்று.
"எஸ்! " உதட்டில் சிறு புன்னகையுடன் விழி விரித்துப் பார்த்தாள்.
அவனுக்குத் தமிழ் உச்சரிப்பு நன்றாகவே வந்தது. என்ன! நம்மால் தான் புரிந்து கொள்ள முடியாது. சரி இருக்கட்டும். இதுவும் காலத்தின் கொடுமைதான். நிறைய ஆங்கிலமும் நல்ல வேளையாகச் சிறிதளவே தமிழும் கலந்து பேசினான்.

"ஹாய்! ஐ ஆம் சிவா! கை குலுக்க கை நீட்டினான்.தயக்கம் இல்லாமல் அவளும் கை குலுக்கினாள். மாற்றப் பெண்களின் கை போல இல்லாமல் அவள் பிடி வேறு மாதிரியாக இருந்தது. 
" என்னோட அம்மாவும் அப்பாவும் இதே ஊரு தான். லவ் மேரேஜ் பன்னிட்டு அங்க லண்டனுக்கு போய்ட்டாங்க. அவங்க கல்யாணம் நல்லபடியா நடந்தா இந்த ஊரு அம்மனுக்கு தாலி செஞ்சு போடறேன்னு வேண்டிக்கிட்டாங்களாம் எங்க அம்மா. ஆனா இப்ப அம்மாவும் சரி அப்பாவும் சரி ரெண்டு பேருமே உயிரோட இல்ல. அதான் அதை நான் செய்யணும்னு அப்பா டெட் பெட்ல இருக்கும்போது சொன்னாரு. அதுக்குத் தான் இங்க வந்திருக்கேன்" பெயருடன் சேர்த்து சிறிதாகச் சுருக்கமாய் வந்த விஷயத்தை விலக்கி விட்டான்.
அவன் சொன்ன விஷயங்கள் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் இப்போது அந்தக் கோவில் மூடப்பட்டு இருக்கிறது. சில நாட்களாக இல்லை. பல வருடங்களாக.
இந்தக் கதைக்களம் இனி போகப் போகும் பாதை..
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
============================================================================
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
எப்படிப் படித்த வரிகள்! ஆம் ! அவர் ஏகன் தான். அநேகன்தான் !
திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகப் பெருமான் பாடிய பாடல் . எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் , சிவபுராணத்திற்கும் கந்த சஷ்டி கவசத்திற்கும் தனி இடம்தான். 

சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த அன்னையிடம் சைகையினாலேயே விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பியவனுக்கு நெற்றியில் விபூதி இட்டு வழி அனுப்பினாள் அன்னை சிவகாமி. மனம் முழுவதும் அவனைப் பற்றிய எண்ணம் தான். அவனைக் காக்க வேண்டியது இறைவனின் பொறுப்பு. சரணடைந்து விட்டாள். இறைவனிடம் சரணடைந்து தானே ஆக வேண்டும். அவன் செய்யும் தொழில் அப்படி. அவன் ஒரு டாக்டர். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர். பேய் பிசாசு என்பதில் எல்லாம் சிவகாமிக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நெகடிவ் வைப்ஸ். நிச்சயம் யாராக இருந்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும். 
பொதுவாக இயற்கை மரணத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லையே! ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிணங்கள். புதுப்புதுப் பிரச்சனைகள். இது போதாது என்று இருபத்து ஒன்பது வயதாகியும் மகனுக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை. பொதுவாக இந்த மாதிரி இருப்பவர்களுக்கு மன ரீதியான பிரச்சனைகளும் இருக்கும் தானே? 
மிகுந்த கவலையுடன் இருந்தவளுக்கு ஜோசியர் சொன்ன விஷயம் இன்னும் சேர்ந்து கொண்டது. உங்க பையனுக்கு இன்னும் ஆறு மாசத்துக்குள்ள பெரிய கண்டம் ஒன்னு இருக்கு. ஆனா அதைச் சரி செய்ய ஒருத்தி வருவா. உங்க ருத்ரனுக்காக ஒரு உமா வருவா. உங்க பையன் ஜாகத்துல இருக்கற பூர்வ புண்யப்பலனும் அந்தப் பொண்ணு ஜாதகத்துல இருக்கற பூர்வ புண்யப்பலனும் சேர்ந்து பெரிய யோகத்தை கொடுக்கப் போகுது. 
அது பத்தி மேற்கொண்டு என்னால வேற எதுவும் சொல்ல முடியாது. ஆனா அதுக்கு அவங்க ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். உங்க மனசுல இருக்கற பல கேள்விகளுக்கும் விடையும் சீக்கிரமே தெரிஞ்சுடும். நம்மால் செய்யக் கூடியது எதுவும் இல்ல. நீங்க அந்த வில்வ லிங்கத்தை மனசுல நினைச்சுக்கோங்க. போங்க உங்க வீட்டு சொத்து உங்களுக்கே திரும்பி வரும். உங்களோட முழு பக்தியும் பிரார்த்தனையும் மட்டும்தான் இனி உங்க பையன் வாழ்க்கையை வழி நடத்தப் போகுது. அன்று ஜோசியர் குரு மூர்த்தி சொன்னதே அவர் காதில் அடிக்கடி காதில் எதிரொலிக்க ஆரம்பித்தது, நமச்சிவாய மந்திரத்துக்கு நடுவில்.
அவர் சொன்ன வில்வலிங்கம் யார்? தன் வீட்டை வேண்டாம் என்று தொலைந்து போனவரா? அதற்கு மேல அந்த ஜோசியரிடம் எதுவும் கேட்க முடியாது. அவர் மற்ற ஜோதிடர்களைப் போன்றவர் அல்ல. அவருக்கென்றே தனித்துவம் உண்டு. ஏதாவது பாப ஜாதகம் வந்தால் பார்க்கக் கூட மாட்டார். அவர் எத்தனை பெரிய ஆட்களாக இருந்தாலும் சரி எத்தனை பெரிய கார்களில் ஊர்வலம் செல்பவர்களாக வந்தாலும் சரி. பொதுவாக எளிதில் அனைத்தையும் சொல்லி விடக் கூடியவர் அல்ல அவர். 
அவர் பார்க்கிறேன் என்று ஒத்துக் கொள்வதே மிகப் பெரிய விஷயம். சில சிறப்பு வாய்ந்த ஜாதகககாரர்களுக்கு மட்டுமே அவர் ஜாதகம் பார்ப்பார். 
ருத்ரனின் ஜாதகம் பார்ப்பதற்கு முன்பு சிவகாமி, அவள் கணவர் சபாபதி அவரின் தந்தையின் ஜாதகம் என்று அனைத்தையுமே பார்த்து விட்டுத்தான் ருத்ரனின் ஜாதகத்தை அவர் கையில் எடுத்தார். சபாபதி இறந்து போனவர்தான். இருந்தாலும் எதற்காக அவரின் ஜாதகத்தையும் பார்த்தார் என்றது தெரியவில்லை. ருத்ரனின் ஜாதகத்தை பார்த்தபோது அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
அவன் தாத்தாவின் ஜாதகத்தை பார்த்தபோது "தப்பு பண்ணீட்டிங்களே ஐயா!" வாய் விட்டே சொன்னார். அவர் கண்களில் என்ன? இரு மணித்துளிகள்! துடைத்துக் கொண்டார். அவருக்கு எல்லாம் தெரிந்தது. வெறும் ஜாதக சடங்காய் மட்டும் பார்த்துச் சொல்பவர் இல்லையே அவர். அவருக்குத் தியானமும் யோகமும் நன்றாகவே பழகி இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு நல்ல தேவதைகள் ஓடி வரக் காத்திருந்தார்கள். அவரைப் பற்றியும் அவர் சொன்ன விஷயங்களைப் பற்றியும் நான் இப்போது கூறக் கூடாது. லாஜிக்கல் எரர் என்று சொல்வீர்களே. வேறொரு சமயத்தில் சொன்னால் சரியாக இருக்கலாம்.
சிவ புராணத்தை முடித்து விட்டு இறைவனுக்கு பாலை அமுது செய்தவர், தன் வீட்டிலிருந்து தொலைந்து போன அந்த வில்வ லிங்கத்தை மனதார நினைத்துக் கொண்டார்.
"இறைவா! நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்குத் தெரியல.ஆனா நீங்க எங்க இருந்தாலும் என்னோட பையனுக்குக் கூடவே இருந்து வழி நடத்த வேண்டியது உங்க பொறுப்பு. அவனுக்கு எந்தக் கெட்டதும் நடக்காம இருக்கணும்" மனதார வேண்டிக்கொண்டார்.
காலையில் வேலைக்கு வந்தவன் வழக்கம்போல வந்து பயிற்சி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடித்து விட்டு அடுத்த வேலைக்குப் போனான். யாரோ ஒரு பெண். நர பலியில் இறந்தவள். அவள் உடலை முழுவதும் ஆராய்ந்து விட்டு உடன் இருந்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இப்போது அவள் உடல்தான் மாணவர்களுக்கு உதவிக்குக் கொண்டிருக்கிறது. (செத்தாலும்) மேன் மக்கள் மேன் மக்களே ! அவள் ஒரு ஆத்மா! இறந்தும் மற்றவர்களுக்குப் படிப்பில் உதவிக் கொண்டிருக்கிறாள். பலவிதமான படிப்புக் கனவுடன் இருந்தவள் யாரோ ஒருத் தீயவன் உயிர் வாழக் கொடூரமாகக் கொல்லப்பட்டவள். 
"சிவன் சொத்து குல நாசம்" இந்த ஆத்மாவும் அவரின் சொத்து தான்.
தெரிந்தோ தெரியாமலோ ருத்ரனின் வாழ்வில் அவள் நுழைந்துவிட்டாள். இனி என்ன ஆகும் ?
ரிப்போர்ட்டைத் தயார் செய்தவனுக்கு மனம் சரியில்லை. நிறைய கேஸ்கள் பார்த்திருக்கிறான். கொடூரமாகக் கற்பழித்து கொலை, முகத்தில் ஆசிட் வீசிக் கொலை, ஆனவக் கொலை, இரண்டு பவுன் தங்கத்திற்காகக் கழுத்தறுத்துக் கொலை., எத்தனை எத்தனை?
ஒவ்வொருப் பிரேதத்தையும் பார்க்கும் போதும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறும். அவனால் முடிந்த வர காவலர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லுவான். அதைத்தாண்டி அவனே கூடச் சில சமயம் அந்தப் பிரேதங்களிடம் பேசி யார் குற்றவாளி என்பதையும் அறிந்து விடுவான். அது என்ன அவனுக்கென்று தனிச் சக்தியா? இந்த வேலைக்காக இறைவன் அவனைத் தேர்ந்தெடுத்தாரா ? அல்லது உயிரற்ற ஆத்மாக்கள் தேர்ந்தெடுத்ததா? தெரியாது.
இது எல்லாம் எப்போதிலிருந்து நடக்கத் தொடங்கியது அதுவும் தெரியாது. இது நல்லதா கெட்டதா? அதுவும் தெரியாது. இறைவனின் பல லீலைகள் நமக்கு எதையும் சொல்வதில்லை. ஆனால் அவன் வாழ்க்கையில் அவனால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது
நடராஜாவின் லீலைகள் தொடரும்..


Leave a comment


Comments


Related Post