இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கூத்தபிரானின் திருநடனம் -5 அனைத்து பாகங்கள் படிக்க
By பரணி உஷா Published on 31-08-2025

Total Views: 67

     இது சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். அதை நினைத்துப் பார்த்தார். இது அடிக்கடி அவர் நினைவிற்கு வரும் சம்பவம்தான். ஆனால் அதன் அர்த்தம் தான் என்ன? அந்தக் குழந்தையின் ஆத்மா அவரிடம் பேச ஆரம்பித்தது தான் முதல் முறை. அதற்குப் பிறகு வேறு சிலரும் வியாரிடம் வந்து அழுவார்கள். இவர் சமாதானம் செய்வார். அவர்கள் தங்கள் உலகத்திற்கு போய் விடுவார்கள் இவரின் பேச்சைக் கேட்டப்பின். மனிதர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கலாம். பேய்களுக்குமா? இவர் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்தச் சிறு குழந்தைக்கு அவர் உதவி செய்வது அந்தத் தீயவர்களுக்குத் தெரிந்து விட்டது. சும்மா விடுவார்களா? 
சொன்னபடியே அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க இவர் போராடினார். அந்தப் பெண்ணிற்கு பிரேதப் பரிசோதனை செய்தவர் இவருக்குச் சீனியர். பெரிய இடங்களில் எல்லாம் தொடர்பில் இருப்பவர், அத்தனை சுலபத்தில் அவர் கொடுத்த ரிப்போர்ட் தப்பு என்று நிரூபித்து விட முடியுமா? மருத்துவர் ருத்ரனின் யோசனையால் அந்தப் பெண்ணின் பெற்றோர் உடலை வாங்க மறுத்துவிட்டனர். கோர்ட்டில் வழக்குப் போட்டார்கள் அதுவும் மருத்துவர் ருத்ரனின் அறிவுரைப்படியே. வேறொரு மருத்துவமனையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேணும் என உத்தரவானது. எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, எல்லாம் முடிந்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள். இருந்தும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வெளியில் வந்து விட்டார்கள். அவர்களுக்கு எதிரான எல்லா சாட்சியங்களும் இருந்தும் அது எப்படி அவர்கள் வெளியில் வர முடிந்தது?
ஏனோ ஏழைகளின் வழக்குகள் பல வருடங்களாக முடியாத போதும் பெரிய வீட்டு பயல்கள் குற்றவாளிகளே அல்ல. அவர்கள்மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்ல நீதிமன்றங்கள் விரைவாகச் செயல்படுகின்றன. மனிதர்கள் உங்களுக்கு எப்படியோ எனக்கு வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இதுவும் காலக் கொடுமை தான். ஹா ஹா ஹா!
"தான் செய்து கொடுத்தச் சத்தியத்தை காப்பாற்ற முடியவில்லையே. காவிரியின் பெற்றோருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ஆம்! அந்தப் பிஞ்சின் பெயர் காவிரி.
இன்று அந்தக் காவிரிக்கு தான் செய்து கொடுத்துச் சத்தியத்தை இவரால் நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்காக அவர் கண்ணீர் சிந்தியது அன்று ஒரு நாள் மட்டும் அல்ல, பல நாட்கள் பல இரவுகள் அன்னைக்கு தெரியாமல் தன்னை பெற்ற அன்னைக்கு தெரியாமல் மறைக்கலாம். நம் எல்லாரையும் பெற்ற அன்னைக்கு தெரியாமல் மறைக்க முடியுமா ?கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னதுதான்.
'எதற்கும் நீ காரணமல்ல' என்று மனதிற்குப் புரிந்தாலும் மூளை அந்தக் குழந்தைக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை என்று குட்டி-குட்டி சொன்னது.
மனமா? மூளையா? எதை எடுத்துக் கொள்வது ? போகட்டும் காலம் என் கையில் கொடுப்பதை விட மனிதர்கள் உங்களுக்கு வேறு ஏதாவது உபாயம் இருக்கிறதா ?
பிறகு இவரை அணுகிய சில நல்ல ஆத்மாக்கள் சொல்லவதைக் கேட்டுச் சமத்தாகத் தங்கள் உலகிற்குச் சென்று விடும். எல்லா ஆத்மாவும் அப்படி குட் ஆத்மாவாக இருந்துவிடுமா? பலதும் கேட்காதுதான். அவர்களுக்கு இவரால் செய்ய முடிந்த உபாயம் பிரார்த்தனை செய்வது. அப்படி அவர் பிரார்த்தனை செய்து அனுப்பி வைத்த ஆத்மாக்களும் இருந்தன. ஆனால் அவைப் பற்றி எதுவும் இவருக்குத் தெரியாது.
அன்னையின் கண்ணீரையும் துடைக்க முடியவில்லை. அந்தக் காவிரியின் கண்ணீரையும் துடைக்க முடியவில்லை. எனக்கேன் இந்த நிலை? யோசித்தவனுக்கு 
தன்னையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் தரையில் விழுந்தது
நல்லவர்களின் கண்ணீர் பூமியில் விழக் கூடாது என்றுசொல்வார்கள். இனி என்ன நடக்கும்?
காலம் நான் பதில் சொல்வேன்.
=====================================================================
"என்ன பாப்பா ஸ்கூல்ல என்ன பாடம்சொல்லிக் கொடுத்தாங்க?"
பேத்தியை வாயிலிலிருந்து பையை அவிழ்த்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார் பாட்டி.
"பாட்டி ! எனக்குச் சூ சூ போகணும் போயிட்டு வந்து சொல்லட்டுமா?"
"அதுக்கு என்ன தங்கம், போயிட்டு கைக்கால் முகம் கழுவிட்டு அப்புறம் சொல்லு" 
பாட்டி சொன்னபடியே எல்லாம் செய்து விட்டுப் பாட்டி தந்த அந்தப் பச்சை வர்ண கவுனைப் போட்டுக் கொண்டாள்.
"இன்னிக்கு என்ன கோவில் பாட்டி?"
"நீ போட்டுருக்கறது என்ன நிறம்? "
"பச்சை "
"அதே கலர்ல நடராஜா இருந்தா?" 
குட்டிக்குத் தெரியாது ஆனால் 
படிக்கும் உங்களுக்குத் தெரியும்.
============================================================================
அன்று வேங்கட சுப்ரமணியன் அண்ணாவும், மன்னியும் வந்து விட்டுப் போனதில் இருந்தே நடராஜனுக்கு கெடுபிடி இன்னும் அதிகமானது. எப்போதுமே தொலைக்காட்சி பார்க்கமாட்டான். விளையாடினால் டைம் வேஸ்ட் என்று நினைக்கும் பல ஆசிரியர்களில் நம் பத்துவுக்கு முதலிடம் கொடுக்கலாம். விளையாட்டு உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சிக் கொடுக்கும். அதுதான் பள்ளிப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாளே! ஆனால் அதை அவருக்கு எப்படி மூளையில் ஏற்றுவது? அவளால் முடிந்திருந்தால் ஐன்ஸ்ட்டின் வீட்டில் வேலைக்காரியாகவாவது சேர்ந்திருப்பாள் அல்லது நியூட்டன் வீட்டிற்க்கு பக்கத்துக்கு வீட்டிலாவது குடி போய் இருந்திருப்பாள். சரி! அது தான் இல்லை, ஒரு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பாக்கவாவது முடிஞ்சுதா நொந்துக் கொண்டே ஹாக்கின்ஸ் குக்கரில் பருப்பை வைத்து மூடினாள். அவளுக்கு மிகவும் பிடித்த குக்கர். 
"ஆனானப்பட்ட ஐன்ஸடீனே பத்து சதவீத மூளையத் தான் பயன்படுத்தினாராம். நீ துளிக் கூட யூஸ் பண்ண மாட்டேங்கிறியேடா" வழக்கம்போலச் சுப்ரபாதம் ஆரம்பித்தது. நடராஜனுக்கு முகம் சுருங்கி விட்டது. அவன் தன்னைத் தொட மாட்டானா தான் பூக்க மாட்டோமா ஏங்கி இருந்த ரோஜா செடிக்கும் சேர்ந்தே தான் முகம் வாடியது.
அது மட்டுமல்ல. அவள் வீட்டில் தொட்டியில் இருக்கும் எல்lலாம் அப்படித்தான்.
ஏதோ ராகம் பாடினால் பூக்கள் பூக்குமாம். எனக்குத் தெரியாது. ஆனால் நடராஜனின் குரல் கேட்டு, கைப்பட்டால் அத்தனை செடிகளும் மலர்ந்து சிரிக்கும். 
"சரி! நீ அம்மாவைத் திட்டாதே. நான் அப்புறமா உன்கிட்ட பேசுறேன்" சொல்லிவிட்டு செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு படிக்கப் போனான்.
'ஏனோ செடிகளை நன்கு பராமரித்துப் பூக்கள் பூக்கவைக்கும் மகனுக்குப் போடோசிந்தஸிஸ் பற்றி எழுத வரவில்லையே.' பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தைக்கு கவலையாக இருந்தது. இது போதாது என்று பள்ளியிலிருந்து வரும்போது தெரு நாய்களிடம் பேசுகிறான் என்று நேற்று தான் அவன் அன்னையிடம் நன்றாக அடி வாங்கினான். பத்மா சொல்வது சரிதான். இவளிடம் அடி வாங்கி கொள்ளலாம்.தெரு நாய் கடித்து விட்டால்? அம்மா மகனுக்கு இடையில் நடக்கும் பஞ்சயாத்து பெரும் பிரச்னையாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
மனதிற்கு பிடித்த ஹாக்கின்ஸ் குக்கரை முடியவளுக்கு செய்திகள் காதில் விழுந்தது. டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் பற்றிய செய்தி.
ஓகே! ரைட் ராஜா! ஒனக்கு பிரச்சனை டெஸ்லா கார்ல வருது. 
பத்மாவுக்கு டெஸ்லா கார்மீது எல்லாம் ஆசை இல்லை. அது நடக்கவும் நடக்காது. இயல்பாக ஆசைப்படுபவள். ஆனால் அறிவியல் விஞ்ஞானி டெஸ்லாவும் ஏசி மோட்டார் டீசி மோட்டார் அவரின் கண்டுபிடிப்புகள், எடிசன், லைட், ஸ்பீட் வேலோஸிட்டி அனைத்தும் அந்த ஒற்றை வார்த்தையில் மண்டையில் வந்து குத்தாட்டம் போட ஆரம்பித்தது.
பாவம் விடுமுறை நாள். நம் ஹீரோ அம்மாவிடம் மாட்டிக் கொண்டான்.இந்தக் காலத்து பிள்ளைகளிடம் பார்த்துப் பார்த்துத் தான் பேச வேண்டி இருக்கிறது. மார்க் குறைந்து விட்டதா? தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். பெற்றோர் திட்டக் கூடாது. அடிக்கக் கூடாது பள்ளியிலும் அப்படித் தான். டீச்சரை கத்தியால் குத்தி விடுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு நடுவில் யார் என்ன சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு தலைக் குனிந்து கண்ணீர் சிந்தும் குழந்தையை என்ன சொல்ல முடியும்? இதுவே வேறு யாராவதாக இருந்தால் இப்படி பொறுமையாக இருந்திருப்பார்களாத் தெரியாது.
அண்ணாப் பெண் நல்ல மார்க் வாங்கி இருக்கிறாள் என்பதையும் தாண்டி அந்த விஷயம் தனக்கு ஏன் தெரிந்தது என்று அவர்கள் வருந்தும் சம்பவம் ஒன்று நடந்தது. அரையாண்டுப் பரீட்சை முடிவுகள் வந்தன. இம்முறை பத்மாவுக்கு முன், வேங்கட சுப்பிரமணிக்கு ஆத்திரம் பொங்கி விட்டது. ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வாங்கி இருந்தான். அருகில் இருந்த குல்முகர் மரத்தின் குச்சியை உடைத்து வந்து அடி பின்னி வாங்கி விட்டார் தந்தை. 
"நானும் அம்மாவும் எவ்ளோ கஷ்டப்பட்டு உன்ன படிக்க வைக்கோறோம். மார்க் வாங்க துப்பில்லை? போய் ரோட்டுல இருக்கற குந்தைங்கள பாரு. தெரு விளக்கு வெளிச்சத்துல மார்க் வாங்குதுங்க. ஒனக்கு என்ன கேடு? பாலும நெய்யும் போட்டு வளர்த்தா படிக்கற வேலைய கூட ஒழுங்கா செய்ய முடியாதா? "
"அப்பா ப்ளீஸ் பா அடிக்காதப்பா. நான் நன்னாதாம்பா படிக்கறேன். எல்லாமே அம்மாகிட்ட சொல்லிப் பார்த்துட்டுதான் போனேன். அம்மாகிட்ட கேளுப்பா. எனக்கு எல்லாமே தெரியும்பா. ஆனா பரிட்சைல மட்டும் என்ன ஆகறதுன்னே தெரியல. ப்ளீஸ்ப்பா என்ன அடிக்காதப்பா. ரொம்ப வலிக்கரதுப்பா"
இவன் கதறல் தந்தைக்கு கேட்கவில்லை. இல்லை கேட்கும் மன நிலையில் இல்லை. எழும்பக் கூட முடியாமல் கிடந்த மகனைப் பார்த்து அன்னை சொன்ன வார்த்தை, யாரும் சொல்லக் கூடாதது.
"ஏண்டா இப்படி மக்கா இருந்தா எங்க காலத்துக்கு அப்புறம் உன்ன யாருடா பார்த்துப்பா? உன்ன பார்த்து எல்லாரும் சீச்சீ ன்னு சொல்லறது பாக்கற சக்தி எனக்கு இல்ல. ஏற்கனவே ஸ்கூல்ல எல்லாரும் உன்ன பத்தி அத்தனை இளக்காரமா பேசறா.இன்னும் இன்னும் எனக்குக் கேக்கற சக்தி இல்லடா. ஏற்கனவே நம்மளவாளுக்கு எந்த இடத்துலயும் சலுகை கிடையாது. ஐநூறுக்கு நானூத்தி தொன்னுத்தி எட்டு வாங்கிண்டு வந்து நிக்கறா. அதுக்கே ஏகப்பட்ட காம்படீஷன்"
"ஒனக்கு நாங்க சொத்தே சேர்த்து வைச்சாலும் எட்டும் எட்டும் பதினாருங்கறது கூடத் தெரியாம நீ என்ன சமாளிக்கப் போற? எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. சரியாய் படிச்சு மார்க் வாங்கினா வாங்கு. இல்லன்னா செத்துப் போடா". 
கோபம் ஆத்திரம் பயம் அவமானம் எல்லாம் சேர்த்து அவளை அந்தச் சொல் சொல்ல வைத்து விட்டது.
மாலை நேரம். வீடு இருளோவென்று இருந்தது. ஏதோ இழவு விழுந்தது போல இருந்தது. ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்திருந்தனர். தந்தை படுக்கை அறையில் தலை சாய்த்து அமர்ந்திருந்தார். மகனை அடித்த துக்கம் அவருக்கு.தனக்கும் தன் மனைவிக்கும் ஏன் இருவரின் குடும்பத்தில் இருந்த அனைவருக்கு கல்விச் செல்வதை அள்ள அள்ளக் கொடுத்த இறைவன்அத்தனையும் தன் மகன் விஷயத்தில் ஏன் பிடுங்கிக் கொண்டார்? பத்மா சொல்வது அத்தனையும் உண்மை. நம் காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்? தம் குழந்தைகள், நல்ல வேலை, திருமணம், குழந்தை என்று இருக்கத்தானே பெற்றவர்கள் ஆசைப் படுவார்கள்? இப்படி இருந்தால் இந்தப் பெண்ணின் வாழ்க்கையை பலிக் கொடுக்க முடியும்? கடவுளே! என் குழந்தையை நானே இப்படி அடிச்சுட்டேனே! தான் ஏன் இப்படி செய்தோம் என்று நினத்தவருக்கு கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. பத்மா சமயல் அறையை விட்டு வெளியில் வரவில்லை. ஒரு பால் காரன் கூட எத்தனை சாமர்த்தியமா தண்ணிய கலந்து கொடுத்துச் சம்பாதிக்கிறான்? இந்தக் குழந்தை இப்படி இருக்கே? என்னப் பண்னுவான்? கவலை மனதைப் பிராண்டியது. இல்லை முடியாது. படித்தாலும் அதை எழுதி மதிப்பெண் வாங்குவது என்பது அவனால் இயலாதக் காரியம். வரப் போவது பத்தாம் வகுப்பு. நிச்சயம் இந்த வருடம் எப்படியாவது சமாளித்தாலும் அவன் பத்தாம் வகுப்பில் நிச்சயம் தவறி விடுவான். இப்போது அல்ல எப்போதுமே அவனுக்குப் படிக்க முடியாது. ஏற்கனவே பள்ளியில் அவனுக்கு ஐ கியூ டெஸ்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி இருக்கிறார்கள். மகனைப் பைத்தியமாகப் பார்க்க என்னால் முடியாது. படித்தவள். எல்லாவற்றிலும் பெஸ்ட். ஒரு நல்ல ஆசிரியராகப் பெஸ்டாக இருந்தவளுக்கு ஒரு நல்ல தாயாகப் பெஸ்ட்டாக இருக்க முடியவில்லை. அவள் ஒரு நல்ல ஆசிரியை என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ ? இருக்கலாம். நல்ல விதத்தில் பாடம் நடத்தி குழந்தைகளை மார்க் எடுக்க வைத்து விட்டால் நல்ல ஆசிரியரோ தானே? வேறு என்ன வேண்டும்? இதுதான் அவர்கள் நினைப்பது. படிப்பு, மதிப்பெண் இதைத் தாண்டி இந்த உலகத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு யார் சொல்வது. இப்படிப் பட்ட பெற்றோர், ஆசிரியர்கள் பள்ளிகள் மக்கள். இந்தச் சமுதாயத்தை எப்படி திருத்த முடியும்?
பள்ளி சீருடையிலேயே இருந்தான் நடராஜன். தந்தையின் அடியும், அன்னையின் சொல்லும் அவனுக்குத் தாங்கவில்லை. எப்பபோதுமே வீட்டில் நடப்பது தான். ஆனால் இம்முறை அவன் வாங்கிய மதிப்பெண் அவனாலேயே ஒத்துக் கொள்ள முடியவில்லை. நம்பிக்கைத் தளர்ந்தது. நேரே இறங்கி விடு விடுவெனவெளியில் சென்றான். ஏதோ ஒரு முடிவில் தான் இருக்கிறான் நடராஜன் என்ன நடக்கும் ?
காலம் நான் பதில் சொல்வேன்.
=====================================================================
ரவி வந்து உமையாளுக்கு காட்டிய வீடு பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருந்தது. "என்னய்யா !அந்த வீட்டியா காட்டப் போற? பாவம்யா. சின்னப் பொண்ணு. ஒத்தாசைக்கு வேற யாரும் இல்ல. அந்த ஒடம்பு சொகமில்லாத அந்த அப்பாவை வச்சுக்கிட்டு அந்தப் பொண்ணு அந்த வீட்டுல எப்படி இருக்கும்?" ரவியின் மனைவி மனம் பரிதவித்தது உமாவுக்காக.
"அதெல்லாம் பரவல்லக்கா. என்ன ஆனாலும் சரி அந்த வீட்டுக்கே நான் போறேன். என்ன மாதிரி வீட்டு வாடகை கூடச் சரியா கட்ட முடியாதவங்க எங்க இருந்தா என்ன? அது என்ன பேய் வீடா? எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. அது மட்டும் இல்லாம எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நான் கந்த ஷஷ்டி கவசம் சொல்லிக்கிட்டு வரேன். 
"கொல்லி வாய் பேய்களும் குறளைப் என்னைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் கண்டிப்பா நிக்க முடியாது"
அவள் இந்த வார்த்தையை அத்தனை தெளிவாகக் கூறுவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோ? அவளின் மன உறுதி நிலைக்குமா?அவளால் ஜெயிக்க முடியுமா? பார்க்கலாம். 

இறைவனின் லீலைகள் தொடரும்..


Leave a comment


Comments


Related Post